‘நியூஸ் பேப்பர் போடுவது முதல் கேல் ரத்னா வரை’- மாரியப்பனின் சாதனைப் பயணம் 

Update: 2020-08-28 01:43 GMT

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன தங்கவேலு. இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியில் டி-42 உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும் அவர் 2020 பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதிப் பெற்று அசத்தியுள்ளார். இந்நிலையில் மாரியப்பன் தங்கவேலு தனது தொடக்க கால வாழ்க்கை குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “2012ஆம் ஆண்டு முதல் 2015 வரை என்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்தேன். நியூஸ் பேப்பர் போடுவது முதல் கூலி தொழிலாளி வரை அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டேன். என் குடும்பத்தை நடத்த என்னால் இயன்ற உதவியை செய்து வந்தேன்.

ஒருநாளைக்கு குறைந்தது 200 ரூபாய் வரை சம்பாதித்தேன். அந்த நினைவுகள் எல்லாம் இப்போது என் கண் முன் வந்து போகின்றன. தற்போது எனக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்துள்ளது. மேலும் என்னுடைய குடும்பம் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளோம். நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

தற்போது நான் ஒருநாளைக்கு இரண்டு வேளை பயிற்சி செய்து வருகிறேன். என்னுடைய ஒரே நோக்கம் டி-42 உயரம் தாண்டுதல் பிரிவில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதேயாகும். இந்தப் பிரிவில் அதிகபட்சமாக 1.96 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டப்பட்டுள்ளது. இதனை நான் முறியடித்து 2 மீட்டர் உயரம் தாண்டுவேன். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்த உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வெல்வதே எனது லட்சியம் ” எனத் தெரிவித்துள்ளார்.

“கேல் ரத்னா விருது கிடைத்தவுடன் கண்ணீர் விட்டு அழுதேன்”- ஹாக்கியின் முடிசூடா ராணி

மாரியப்பன் தங்கவேலுவை பயிற்சியாளர் சத்யநாராயணா 2013ஆம் ஆண்டு தேசிய பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பார்த்துள்ளார். அப்போது மாரியப்பனின் திறமையை உணர்ந்த பயிற்சியாளர் மாரியப்பனை பெங்களூருவிற்கு அழைத்து பயிற்சி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மாரியப்பன் ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தி உலக புகழ் பெற்றார்.

கேல் ரத்னா விருது பெற போகும் மாரியப்பன் தங்கவேலு அவரது குடும்பத்தை மட்டுமல்லாது மொத்த தமிழ்நாட்டிற்கும் பெரிய பெருமை பெற்று தந்துள்ளார். இவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.

மேலும் படிக்க: ஊரடங்கால் தடகள பயிற்சி இடமாக மாறிய நீலகிரி வெலிங்டன் மலை ரயில் நிலையம்