தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை ஜோஷ்னா

Update: 2020-02-15 01:37 GMT

77வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு, சரியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெறுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா மகாராஷ்டிராவின் சன்யா வட்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோஷ்னா 11-9, 11-7, 11-4 என்ற கணக்கில் எளிதில் சன்யாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனையான சுனைனா குருவில்லா டெல்லியின் தன்வி கண்ணாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை குருவில்லா 6-11, 11-3,8-11, 11-8, 10-12 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

ஆடவர் பிரிவில் முதல் அரையிறுதியில் அனுபவம் வாய்ந்த சவுரவ் கோஷல் அபே சிங்கை எதிர்த்து விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய சவுரவ் கோஷல் 11-9, 11-1, 11-8 என்ற கணக்கில் அபே சிங்கை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஹரிந்தர் பால் சந்து மற்றும் அபிஷேக் பிரதான் ஆகிய இருவரும் மோதினர். இதில் 11-6, 12-10, 10-12, 9-11, 11-7 என்ற ஐந்து கேம்களின் மூலம் அபிஷேக் ஹரிந்தர் பால் சந்துவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

சவுரவ் கோஷல்

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சவுரவ் கோஷல் மற்றும் அபிஷேக் பிரதான் மோதவுள்ளனர். அதேபோல மகளிர் இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா டெல்லியின் தன்வி கண்ணாவை எதிர்த்து விளையாட உள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் பட்டத்தை வென்றால் அது சவுரவ் கோஷலுக்கு 13ஆவது தேசிய சாம்பியன்ஷிப் பட்டமாகும். அதேசமயம் மகளிர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா பட்டம் வென்றால் அது அவருக்கு 18ஆவது தேசிய பட்டமாகும்.