தேசிய ஃபென்சிங்: மூன்றாவது முறையாக தங்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி

Update: 2020-02-15 11:27 GMT

இந்தியாவில் மிகவும் பரிட்சயப்படாத விளையாட்டுகளில் ஒன்று ஃபென்சிங். அதாவது வாள்வீச்சு விளையாட்டு. இந்த விளையாட்டில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் சேபர் ஃபென்சிங் ரக வாள்வீச்சு போட்டியில் களம் கண்டு வருபவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி.

இவர் தற்போது நடைபெற்ற 30ஆவது தேசிய ஃபென்சிங் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் சேபர் ரக ஃபென்சிங் பிரிவில் பவானி தேவி களம் கண்டார். இதில் தனி நபர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவானி தேவி தங்கப்பதக்கத்தை வென்றார்.

மேலும் அதேபிரிவில் அணிப் பிரிவில் பவானி தேவி தமிழ்நாடு அணிக்காக களமிறங்கினார். அதில் தமிழ்நாட்டு அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. தேசிய ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி சாம்பியன் பட்டம் வெல்வது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு அவர் இரண்டு முறை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

https://twitter.com/iambhavanidevi/status/1228618132169859073?s=21

பவானி தேவி விளையாடும் சேபர் ஃபென்சிங் பிரிவில் எதிராளியின் மேல் உடம்பு பகுதியில் தொட்டால் மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும். அதுவும் கைகளில் தொட்டால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. இதனால் சேபர் ஃபென்சிங் புள்ளிகளை பெற வேண்டும் என்றால் ஒருவர் மிகவும் வேகமாகவும் துடிப்புடனும் இருக்கவேண்டும்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெறும் முனைப்பில் உள்ள பவானி தேவிக்கு இது ஒரு நல்ல தூண்டுகோளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.