டேவிட் வார்னரை கலங்கடித்த வருண் சக்ரவர்த்தி - ஐபிஎல் தொடரில் கலக்கும் மற்றொரு மாயாஜால தமிழன்

Update: 2020-09-27 06:32 GMT

கொரோனா தொற்று காரணமாக துபாயில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் மெல்ல மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை இந்திய வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து அணிகளிலும் நமது தமிழக வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கிய கேகேஆர் அணி எஸ்ஆர்ஹச் அணியை எதிர்கொண்டது. அந்த அணியின் கேப்டனும் உலகில் தலைசிறந்த அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னரின் விக்கெட்டினை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் வீழ்த்தி தனது அணி வெற்றி பெற வித்திட்டார் வருண் சக்ரவர்த்தி.

யார் இவர்? சிறிது பின்னோக்கி சென்று பார்ப்போம்.

ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பல தமிழக இளைஞர்கள் போல குடும்ப நலனுக்காக தனது கிரிக்கெட் கனவினை தியாகம் செய்தார். எஸ்ஆர்எம் கல்லூரியில் என்ஜீனியரிங் படித்து ஆர்க்கிடெக்டாக வேலை செய்து வந்தவருக்கு மீண்டும் கிரிக்கெட் ஆசை வர மீண்டும் விளையாட தொடங்கினார். இதுகுறித்து கேகேஆர் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியதாவது, "கிரிக்கெட்டினை நான் துறந்தாலும் அது என்னை விட்டு போகவில்லை. நான் வேலை செய்யும் போதும் கிரிக்கெட் பற்றிய யோசனை எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும்" என்றார். அப்போது அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது டின்பிஎல், அதில் அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தனது மாயாஜால பந்துவீச்சினால் வீக்கெட்களை குவித்ததோடு ரன்களையும் விட்டுக்கொடுக்காமல் தனது அணியான மதுரை பாந்தர்ஸ் தங்களது முதல் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

வருண் சக்ரவர்த்தி தனது அணியான மதுரை பாந்தர்ஸ் தங்களது முதல் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

அதன் பிறகு நடந்த விஜய் ஹசாரே தொடரிலும் தமிழக அணிக்காக சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை அள்ளினார். இதனால் அடுத்த நடக்கவிருந்த கடந்த வருட ஐபிஎல் ஆக்ஷ்னில் அனைவரின் கவனமும் இவர் மீதே இருந்தது. அதற்கேற்றாற்போல் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 8.4 கோடிகள் கொடுத்து இவரை எடுத்தது. இது சிறந்த செய்தி என்றாலும் அதுவே அவருக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுத்தது. அதேபோல் முதல் ஆட்டத்தில் அவரால் சிறப்பாக விளையாட முடியாமல் போய்விட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆட்டத்தில் அவருக்கு காயமும் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சீசனில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தவித போட்டியிலும் விளையாடாமல் இருந்த இவரை இந்த வருட ஆக்ஷ்னில் யாரும் எடுக்கமாட்டார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கேகேஆர் அணி ஆச்சரியம் அளிக்கும் விதமாக 4 கோடி கொடுத்து எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக். இது வருணுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. தன் மீது கேப்டன் வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் தன் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அசத்தினார். தேவை இல்லாமல் எந்த தவறும் செய்யாமல் நேர்த்தியான பவுலிங்கினை வெளிப்படுத்தினார்.

இது வருண் சக்ரவர்த்திக்கு ஒரு தொடக்கம் மட்டுமே. இதே போல அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என வாழ்த்துவோம்!

மேலும் படிக்க: “என்னுடைய முதல் ஸ்பான்சர் அவர் தான்”- எஸ்பிபிக்கு விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல்