கிரிக்கெட்டிற்காக ஒலிம்பிக் போட்டியை தவறவிட்ட கோபாலன்!

Update: 2021-01-31 02:49 GMT

ஆஸ்திரேலியா,நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஒரே வீரர் பல விளையாட்டுகளில் களமிறங்கியுள்ளதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அதே மாதிரி இந்தியாவில் ஒரே வீரர் இரண்டு விளையாட்டுகளில் விளையாடியதை கேட்டிருக்கிறோமா? அப்படி ஒரு தமிழர் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து வியக்க வைத்துள்ளார். யார் அவர்?

1900களில் மெட்ராஸ் மாகானத்தில் பிறந்தவர் எம்.ஜே.கோபாலன். இவர் சிறுவயது முதல் விளையாட்டு மீது அதிக ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். இவரின் கிரிக்கெட் திறமையை பார்த்த சி.பி.ஜான்ஸ்டோன் இவரை மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து 1926ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகானத்திற்காக முதல் முறையாக இவர் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 1930ஆம் ஆண்டு மெட்ராஸ் மற்றும் விழியநகரம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மென் ஜேக் ஹாப்ஸின் விக்கெட்டை மூன்று முறை எடுத்து அசத்தினார். அத்துடன் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையையும் கோபாலன் படைத்தார்.

மேலும் 1934ஆம் ஆண்டு முதல் முறையாக ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடங்கின. ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் பந்தை வீசியவர் என்ற பெருமையையும் எம்.ஜே.கோபாலன் பெற்றார். கிரிக்கெட் வாழ்க்கை ஒரு புறம் இருக்க மற்றொரு முனையில் இவரின் ஹாக்கி விளையாட்டு திறமையும் சிறப்பாக இருந்தது. இவரின் ஹாக்கி விளையாட்டை பார்த்த அப்போதைய பத்திரிகையாளர் முருகேச முதலியார் முறையான ஹாக்கி சாதனங்களை இவர்க்கு வழங்கினார்.

அதன்பின்னர் காலையில் கிரிக்கெட் விளையாட்டும் மாலையில் ஹாக்கி விளையாட்டும் என இரண்டிலும் கோபாலன் கலக்கினார். அவருடைய உடற்தகுதி பலரையும் வியக்க வைத்தது. ஏனென்றால் காலை முதல் மாலை வரை ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு பின்பு மாலையில் ஹாக்கி பயிற்சிக்கு செல்வார். இதனை பலரும் பார்த்து வியந்தனர்.

இந்திய ஹாக்கி அணி இலங்கை,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் கோபாலன் இடம்பெற்று இருந்தார். இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்திலும் வெற்றிப் பெற்றது. இதில் கோபாலன் 39 போட்டிகளில் களமிறங்கினார்.

அப்போது இவருடைய ஹாக்கி திறமையை பார்த்த தயான்சந்த் இவர் ஒரு சிறப்பான வீரர் என்று பாராட்டியிருந்தார். இவரின் முதல் காதல் கிரிக்கெட், இரண்டாவது காதல் ஹாக்கி எனவும் தயான்சந்த் கூறியிருந்தார். 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி அணியில் கோபாலன் இடம்பிடித்தார்.

எனினும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் அப்போது கிரிக்கெட்டிற்காக பெர்லின் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்வில்லை எனத் தெரிவித்தார். இது அவரின் வாழ்வில் மிகப்பெரிய முடிவாக பார்க்கப்பட்டது. அந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் கோபாலனுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

இதன்பின்னர் கோபாலன் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. 1951ஆம் ஆண்டு வரை அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். இப்படி கிரிக்கெட்,ஹாக்கி என இரண்டு விளையாட்டிலும் அசத்திய கோபாலன் ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்டது தவறான முடிவு என்று பலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘வடசென்னையும் கேரமும்’ – மறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உலக சாம்பியன் மரியா இருதயத்தின் கதை!