தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!

Update: 2021-01-18 09:13 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிராஜிற்கு பெரிய சோதனை காத்திருந்தது. அதாவது ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே இவருடைய தந்தை மரணம் அடைந்தார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பயணத்திற்கு நிறையே கெடுபிடிகள் இருந்ததால் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வர முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து இவரை இந்திய அணியின் பயிற்சியாளர்கள் ஆறுதல் அளித்துள்ளனர். அதில்,” உன்னுடைய தந்தையின் ஆசையின்படி நீ ஒரு இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று 5 விக்கெட் வீழ்த்தி சாதிப்பாய்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஏற்றபடி சிராஜிற்கு இரண்டாவது டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக பந்துவீசினார். இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதால் இவர் முக்கிய பந்துவீச்சாளர் ஆனார்.

இந்தப் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி பயிற்சியாளர்கள் கூறியதை உண்மையாக்கியுள்ளார். மேலும் கடந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் இவர் மீது ரசிகர்கள் சிலர் இனவெறி தாக்குதல் நடத்தினர். அதனையும் பொருட்படுத்தாமல் தனது ஆட்டத்தின் மேல் கவனம் செலுத்தி சிராஜ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சிராஜின் இந்த எழுச்சிப் பயணம் பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

மேலும் படிக்க: பேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்!