‘புதுக்கோட்டையிலிருந்து கோவிந்தன் லக்‌ஷ்மணன்’- தந்தையை இழந்த மகனின் சாதனைப் பயணம்!

Update: 2021-02-08 04:04 GMT

தடகள போட்டிகளில் மிகவும் கடினமாக பார்க்கப்படும் போட்டிகள் என்றால் அது 5000 மற்றும் 10000 மீட்டர் ஓட்டப்பந்தையங்கள் தான். இந்தப் பிரிவு ஓட்டப் பந்தையங்களில் இந்தியா சார்பில் பலர் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் அவர்களில் இருந்து சற்று மாறுபட்டு சாதித்தவர் தான் கோவிந்தன் லக்‌ஷ்மணன்.

புதுகோட்டை மாவட்டம் கவிநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் லக்‌ஷ்மணன். இவருடைய தந்தை விவசாயம் செய்து வந்தார். இவரின் தாய் ஜெயராணி கூலி தொழில் செய்து வந்தார். கோவிந்தனுக்கு 6வயதாக இருந்த போது அவரின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவருடைய தாய் கூலி வேலை செய்து கோவிந்தனை காப்பாற்றி வந்தார்.

தனது தந்தையின் மரணத்தை சிறுவயதிலேயே பார்த்த கோவிந்தன் துவண்டு போகாமல் சாதித்து முன்னேற வேண்டும் என்று வெறியுடன் இருந்தார். 16வயதில் தடகள வீரராக உருவாக வேண்டும் என்று எண்ணம் கோவிந்தனுக்கு தோன்றியது. இதற்கு அவரின் வீட்டிற்கு அருகே இருந்த தடகள பயிற்சியாளர் லோகநாதன் முழு உதவி அளித்தார். கோவிந்தனை தனது அகாடமியில் சேர்த்து லோகநாதன் பயிற்சியளிக்க தொடங்கினார்.

இவர் 5000 மற்றும் 10000 மீட்டர் ஓட்டப்பந்தையங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அத்துடன் பாதி மாராத்தான் பந்தையங்களிலும் இவர் பங்கேற்றார். 2015ஆம் ஆண்டு வூஹானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 5000 மீட்டரில் வெண்கலமும் 10000 மீட்டரில் வெள்ளியும் வென்று சாதனைப் படைத்தார். அப்போது முதல் தடகள உலகில் இவர் கால் பதிக்க ஆரம்பித்தார்.

இதன்பின்னர் 2017 புவனேஸ்வரில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீட்டர் மற்றும் 10000 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் அதே ஆண்டில் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இவர் பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீட்டர் பிரிவில் பந்தைய தூரத்தை 13.35.69 என்ற நேரத்தில் கடந்தார். இதில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும் தன்னுடைய சிறந்த நேரத்தை இவர் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 10000 மீட்டர் பிரிவில் 29.44.91 என்ற நேரத்தில் கடந்து இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். எனினும் இவர் அந்தப் போட்டியின் போது தடகள டிராக்கிற்கு வெளியே கால் வைத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இவருடைய வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது.

தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்று வரும் கோவிந்தன் லக்‌ஷ்மணன் தனது பயிற்சியாளர் சுரேந்திர சிங்கின் 10000 மீட்டர் தேசிய சாதனையை முறியடிக்க முயற்சி செய்து வருகிறார். சுரேந்திர சிங் 2008ஆம் ஆண்டு 28.02.89 என்ற நேரத்தில் 10000 மீட்டர் பந்தையத்தை கடந்து இச்சாதனையை படைத்தார். அந்த நேரத்தை எட்டி பிடிக்கும் முயற்சியில் கோவிந்தன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னையின் எஃப்சி வீரர்கள்!