“ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, பாரத ரத்னா விருது பெற வேண்டும்” - மேரி கோம்

Update: 2020-01-26 14:42 GMT

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை இந்திய அரசு நேற்று

அறிவித்தது. இதில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்பவிபூஷன் விருது

அறிவிக்கப்பட்டது.

குத்துச்சண்டை விளையாட்டில், 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இந்திய வரலாற்றில், பத்பவிபூஷன் விருது பெறும் முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையும் மேரி கோமைச் சேரும்.

இது குறித்து பேசிய அவர், “ஒரு நாள் பாரத ரத்னா விருது பெற வேண்டும் என கனவு காண்கிறேன். இப்போது பத்பவிபூஷன் விருது கிடைத்திருப்பது பாரத ரத்னா பெற வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என உத்வேகம் கொடுக்கிறது.” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை ஒரு விளையாட்டு வீரருக்குதான் பாரத ரத்னா விருது கிடைத்திருக்கிறது. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அந்த விருதை நான் பெறுவேன் என நம்பிக்கை கொள்கிறேன். பாரத ரத்னா பெறும் முதல் வீராங்கனையாகவும் இருப்பேன் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்

36 வயதாகும் மேரி கோம், இப்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு

தயாராகி வருகிறார். இது குறித்து பேசிய அவர், “தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

பெற வேண்டும் என்பதிலேயே முழு கவனம் உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி

பெற்றவுடன், பதக்கங்களை குறித்து யோசிக்கலாம். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று

பாரத ரத்னாவை பெற வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

“நான் ஓர் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு முறை இந்தியாவுக்காக

விளையாடும்போது, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்பாக

இருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு அளவே இல்லை.

சிறப்பாக விளையாடி, பதக்கங்களை வென்று மக்களை பெருமைப்படுத்த வேண்டும்” என்றார்.