தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உட்பட ஐந்து பேர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை

Update: 2020-08-18 12:05 GMT

2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ் நாட்டினை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு இந்தாண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, ஹாக்கி மகளிர் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்விருதுக்கு 4 வீரர்கள் ஒரே ஆண்டில் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனை தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வு குழு சாய் தலைமையகத்தில் இன்று அறிவித்தது. இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் (டி 42பிரிவில்) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு. ஏசியன் கேம்ஸில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை 2018ல் நிகழ்த்தினார் வினேஷ் போகட்.

அதேபோல் 2018 காமன்வெல்த் கேம்ஸில் தங்கம் மற்றும் ஏசியன் கேம்ஸில் வெண்கல பதக்கங்கள் என அசத்தியிருந்தார் டேபிளில் டென்னிஸ் வீராங்கனை மணிகா பட்ரா. கடந்த வருடத்திற்கான கேல் ரத்னா விருது பாராலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டென்னிஸ்: நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சுமித் நாகல்