“மரடோனாவால் கிரிக்கெட் விளையாட வந்தேன்”- இந்திய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை

Update: 2020-07-10 03:27 GMT

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக சச்சின், பிராட்மென், லாரா போன்ற வீரர்கள் இருப்பது வழக்கம். ஆனால் ஒரு கால் பந்து வீரர் கிரிக்கெட் விளையாட தூண்டுகோளாக இருந்தது யாரும் அறியாத ஒன்று. இதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீராங்கனை தெரிவித்துள்ளார். யார் அவர்?

மகளிர் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ‘ஃபிமேல் கிரிக்கெட்’ என்ற தளம் வெளியிட்டு வருகிறது. அண்மையில் இந்த தளத்தின் சார்பில் ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீராங்கனையுமான ஜூலன் கோசாமி கலந்து கொண்டார்.

 

 

அதில் அவர் தனது கிரிக்கெட் விளையாட்டிற்கு யார் தூண்டுகோளாக இருந்தார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர், “எனது குழந்தை பருவத்தில் நான் அத்தை வீட்டில் வளர்ந்தேன். அப்போது மேற்குவங்கமும் கால்பந்தும் மிகவும் பிரிக்க முடியாத ஒன்று. அந்த சமயத்தில் மேற்குவங்க மக்கள் கால்பந்து மீது அதிக நாட்டத்துடன் இருந்தனர். என்னுடைய அத்தையும் அவரது குடும்பத்தினரும் அர்ஜென்டினாவின் மரடோனாவை அதிக விரும்பினர்.

1990ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியில் மரடோனா இருந்தார். அப்போது அர்ஜென்டினா தோல்வி அடைந்த போதெல்லாம் அவர் அழுதார். இதனைப் பார்த்த எனது அத்தையும் அவரது குடும்பத்தினரும் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர்.

அப்போது நான் ஒன்றை கற்றுக் கொண்டேன். விளையாட்டு மனிதர்களிடம் எவ்வளவு ஆழமாக செல்கிறது என்பது தான் அது. அப்போது விளையாட்டு ஒரு மனிதரின் வாழ்வையே மாற்றிவிடும் என்று நான் முடிவு செய்தேன். இதனால் தான் கிரிக்கெட் விளையாட வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கால்பந்து ரசிகர்களுக்கு பேர் போனது. அங்கு இருந்த வந்த ஜூலன் கோசாமியும் கால்பந்து வீரர் மரடோனாவால் ஈர்க்கப்பட்டு கிரிக்கெட்டிற்கு வந்தது மிகந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.