டாட்டா மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடரும் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 9ஆம் தேதி வரை புனேவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடர் இதுவே ஆகும்.
முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இரண்டு இந்திய வீரர்களான சுமித் நகல் மற்றும் ராம்குமார் ராமநாதன் தோல்வி அடைந்து வெளியேறினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் அர்ஜூன் காதே தோல்வி அடைந்தார். பின்னர் விளையாடிய இந்தியாவின் முதல்நிலை வீரர் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் தனது கடைசி ஏடிபி தொடரில் பங்கேற்கும் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவில் தனது முதல் போட்டியில் களமிறங்கினார். இவரும் ஆஸ்திரேலியாவின் எப்டனும் இந்தியாவின் திவிஜ் சரண் மற்றும் நியூசிலாந்தின் ஆர்டெக் சிட்டாம் இணையை எதிர்கொண்டனர்.
இந்தப் போட்டியில் முதல் செட்டில் லியாண்டர் பயஸ் ஜோடி முதல் மூன்று கேம்களை வென்றனர். பின்னர் திவிஜ் சரண் ஜோடி இரண்டு கேம்களை வென்றனர். எனினும் சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி 31 நிமிடம் நடைபெற்ற முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டில் இரு ஜோடியும் மாறி மாறி கேம்களை வென்று கொண்டு வந்தனர். இதனால் இரண்டாவது செட் மிகவும் இறுதியில் இரு ஜோடியும் 6 கேம்களை வென்றதால் செட்டின் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் வைக்கப்பட்டது.
டை பிரேக்கரில் சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி டை பிரேக்கரை வென்றது. இதன்மூலம் ஒரு மணி நேரம் 24 நிமிடம் நடைபெற்ற போட்டியில் 6-2,7-6 என்ற கணக்கில் பயஸ் ஜோடி இத் தொடரின் இரண்டாம் நிலை ஜோடியான திவிஜ் சரண்- ஆர்டெக் சிட்டாக் இணையை வீழ்த்தியது.