ஊக்க மருந்து பயன்படுத்தி தடை செய்யப்படவுள்ள  முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை

Update: 2020-08-12 14:07 GMT

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் நடைமுறை விதிகளை ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் யார்?

மத்திய பிரதேச மாநில மகளிர் கிரிக்கெட் அணியில் அனுஷூலா ராவ் இடம்பெற்றுள்ளார். இவர் வலது பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் ஆல்ரவுண்டர். கடந்த மார்ச் மாதம் இவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்தப் பரிசோதனையில் இவரிடமிருந்து எடுக்கப்பட்ட ‘பி’ மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான நாரென்டிஸ்டோர்ன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவரை கிரிக்கெட் விளையாடாமல் தடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஊக்க மருந்து பயன்பாட்டிற்கு கிட்டதட்ட 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை தடை செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த முடிவு குறித்து முறையிட அனுஷூலாவிற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணியின் பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் 8 மாதங்கள் தடை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தடை செய்யப்பட போகும் முதல் வீராங்கனை அனுஷூலா ராவ் ஆகும். இந்த ஊக்க மருந்து சர்ச்சை மகளிர் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.