'25 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருது கிடைத்திருக்கவேண்டும்’- தனது பயிற்சியாளரின் பத்மஶ்ரீ விருது குறித்து பி.டி.உஷா

Update: 2021-01-26 02:53 GMT

2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை உட்பட விளையாட்டு தொடர்பான 7 பேருக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் தடகள மங்கை பி.டி.உஷாவின் பயிற்சியாளர் நம்பியாரும் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனை என்றால் அது பி.டி.உஷா தான். அவர் செய்த சாதனைகள் மிகவும் சிறப்பான ஒன்று. தடகளத்தில் ட்ராக் மற்றும் ஃபீல்ட் பிரிவில் அதிக முறை தங்கம் வென்ற ஆசிய வீராங்கனை இவர் தான். குறிப்பாக 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இவர் 4ஆவதாக வந்து மிகவும் குறுகிய இடைவேளையில் பதக்கத்தை தவறவிட்டார்.

1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை எடுக்க காரணமாக இருந்தவர் அவருடைய பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார். இவர் பி.டி.உஷாவிற்கு சிறுவயது முதல் பயிற்சியளித்து வந்தார். இவருடைய அறிவுரையை ஏற்று தான் அந்த ஒலிம்பிக் தொடரில் பி.டி.உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்றார். அது கிட்டதட்ட இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கத்தையே பெற்று தரும் அளவிற்கு மிகவும் சரியான ஆலோசனையாக அமைந்தது.

இதற்காக 1985ஆம் ஆண்டு ஓ.எம்.நம்பியாருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது. தடகள உலகில் மிகவும் மதிக்கப்படும் பயிற்சியாளர்கள் வரிசையில் ஓ.எம்.நம்பியாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பி.டி.உஷாவே பல வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்து வரும் நிலையில் அவருடைய பயிற்சியாளருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்திற்கு பி.டி.உஷா, “என்னுடைய பயிற்சியாளருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விருதிற்கு அவர் மிகவும் தகுதியானவர். இந்த விருது அவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொடுத்திருக்க வேண்டும். எனினும் தாமதமாக அவருக்கு கிடைத்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி.

1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் என்னுடைய தங்கப்பதக்கம் தான் இந்தியாவை 14ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு கொண்டு வந்தது. அத்துடன் என்னுடய 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் ஓட்டமும் மிகச் சிறப்பாக அமைய அவர் தான் காரணம். அவர் ஒரு சிறப்பான பயிற்சியாளர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரைக்கு பத்மஶ்ரீ விருது!