ஏடிபி சேலஞ்சர் பெங்களூரூ 2020: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லியான்டர், ராம்குமார்

Update: 2020-02-14 20:30 GMT

ஏடிபி சேலஞ்ர் போட்டிகளில், ஏசியாவிலேயே அதிக பரிசுத்தொகை வழங்கும் போட்டியான ஏடிபி சேலஞ்ர் பெங்களூரு 2020, கேஎஸ்எல்டிஏ டென்னிஸ் மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் அனைத்து இந்திய வீரர்களும் தோல்வி அடைந்த போதிலும் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டென்னிஸ் ஜாம்பவானான லியான்டர் பயஸ் இந்தியாவில் அவர் விளையாடும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவர் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவருது விருப்பமாகும். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதமாகவே இந்த தொடர் முழுவதும் அவர் ஆட்டம் இருந்துள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் லியான்டர் பயஸ், மேத்யூ எப்டன் இணை ஆண்ரே, எல்ரிச் இணையை எதிர்த்து விளையாடி (6-4, 3-6, 10-7) என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.

மற்றொரு அரையிறுதியில் இந்திய இணையான ராம்குமார் ராமநாதன், புரவ் ராஜா ஆகியோர் சாகேத் மைனேனி மற்றும் மேட் ரெய்ட் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். முதல் செட்டினை ராம்குமார் இணை (7-5) என வென்றிருக்க, துரதிர்ஷ்டவசமாக ரெய்ட் காயமடைந்ததால் ஆட்டத்திலிருந்து விலக நேர்ந்தது. இதன்மூலம் ராம்குமார், புரவ் ராஜா இணை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தாங்கள் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் 2ல் மட்டுமே தோல்வி அடைந்திருப்பது குறிப்படதக்கது.

பலம் வாய்ந்த இரு இணைகள் மோதுவதால் இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஒரு இந்திய அணி பட்டம் வெல்ல போகும் மகிழ்ச்சி இருந்தாலும், இந்திய மண்ணில் தனது டென்னிஸ் பயணத்தை கோப்பையுடன் முடிப்பாரா லியான்டர் என்பதை காணவே அனைத்து ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.