இந்தியாவின் ஜாம்பவான் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இந்த ஆண்டுடன் தனது புரபஷனல் டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வுப் பெற உள்ளார். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள லியாண்டர் பயஸ். ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் டென்னிஸ் வாழ்க்கையில் பயணித்துள்ளார்.
பொதுவாக டென்னிஸ் என்றவுடன் நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், ஜோகாவிச் ஆகிய அந்நிய நாட்டு வீரர்கள் தான். ஆனால் டென்னிஸ் உலகில் இவர்களை விட மிகவும் அதிக சாதனைப் படைத்த ஒரு வீரர் என்றால் அது நம் லியாண்டர் பயஸ் தான் என்றால் மிகை ஆகாது. அப்படி அவர் செய்த சாதனைகள் என்ன? அவர் ஒரு ஜாம்பவான் வீரராக காரணம் என்ன?
தனது
5ஆவது
வயது முதல் லியாண்டர் பயஸ்
டென்னிஸ் பயிற்சியை தொடங்கினார்.
அப்போது
30
ஆண்டுகள்
சர்வதேச டென்னிஸில் அவர்
கொடிக் கட்டி பறப்பார் என்று
நினைத்து கூட பார்த்திருக்க
மாட்டார்.
ஆனால்
அவர் அதனை தற்போது செய்து
காட்டியுள்ளார்.
1990ஆம் ஆண்டு லியாண்டர் பயஸ் ஜூனியர். விம்பிள்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அப்போது ஜூனியர் பிரிவில் சர்வதேச தரவரிசையில் லியாண்ட பயஸ் முதலிடம் பிடித்தார். அதன்பின்னர் 1990ஆம் ஆண்டு நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடரில் முதல் முறையாக களமிறங்கினார்.
அப்போது முதல் பயஸின் டென்னிஸ் வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம் தான். குறிப்பாக 1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பயஸ் வெண்கல பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென் முதல் இந்தியர் லியாண்டர் பயஸ் தான். மேலும் 1998ஆம் ஆண்டு டென்னிஸ் உலகில் அப்போதைய முன்னணி வீரரான பீட் சாம்பர்ஸை பயஸ் தோற்கடித்து அசத்தினார்.
டென்னிஸ் உலகில் ஆடவர் இரட்டையர் பிரிவிலும் பயஸ் முத்திரை பதிக்காமல் இருக்கவில்லை. இவர் 1994ஆம் ஆண்டு முதல் மற்றொரு இந்திய வீரரான மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து டென்னிஸ் உலகை அதிரவைத்தார். இவர்கள் இருவரும் 1997-98 ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குச் சென்ற 8 ஏடிபி தொடர்களில் 6ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இவைமட்டுமின்றி 1999ஆம் ஆண்டு பயஸ்-பூபதி இணை நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றனர். அதில் பிரான்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இந்த ஜோடி தன்வசம்படுத்தியது. இதனால் இந்த இணை ஏடிபி தரவரிசையில் இரட்டையர் பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த இணை பிரிந்தது. எனினும் இவர்கள் இருவரும் மீண்டும் 2001ஆம் ஆண்டு இணைந்து விளையாடி பிரான்சு ஓபன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றனர். அதற்கு பின்பு மற்ற வீரர்களுடன் பயஸ் மேலும் 5 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்று சாதித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவையும் லியாண்டர் பயஸ் களமிறங்காமல் விடவில்லை. அந்தப் பிரிவிலும் லியாண்டர் பயஸ் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்வசபடுத்தி சாதனைப் படைத்தார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் வெவ்வேறு பத்தாண்டு காலங்களில் கிராண்ட்ஸ்லாம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை பயஸ் படைத்தார். இவருக்கு முன்பாக ராட் லெவர் அந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
மேலும் டேவிஸ் கோப்பைகளில் 1990ஆம் ஆண்டு முதல் பங்கேற்று வரும் லியாண்டர் பயஸ் மொத்தமாக அந்தப் போட்டிகளில் இதுவரை 44 இரட்டையர் ஆட்டங்களை வென்றுள்ளார். இது உலகவில் மிகப்பெரிய சாதனையாகும்.
இவை மட்டுமின்றி 1992ஆம் ஆண்டு முதல் 2016 ரியோஒலிம்பிக் வரை தொடர்ச்சியாக 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தான். இந்தாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றால் அது பயஸிற்கு 8ஆவது ஒலிம்பிக் போட்டியாக அமைந்துவிடும். இது டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நாட்கள் யாரும் நெருங்க கூட முடியாத சாதனையாக அமையும்.
இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரரான லியாண்டர் பயஸ் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் ஆண்டில் விளையாடி கொண்டிருப்பது மிகவும் வருத்தமான ஒன்று தான். எனினும் விளையாட்டு வீரர்கள் ஒருநாள் தங்களது விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெற்று தான் ஆகவேண்டும். அந்தக் கால கட்டத்தில் 46 வயதான டென்னிஸ் ஜாம்பவான் பயஸ் நெருங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.