தோல்வியுடன் ஆஸி. ஓபனுக்கு 'பிரியா விடை' கொடுத்த பயஸ்

Update: 2020-01-28 07:03 GMT

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் லியாண்டர் பயஸிற்கு கலப்பு இரட்டையர் பிரிவில் வைல்ட் கார்டு முறை மூலம் விளையாட தகுதி அளிக்கப்பட்டது. இந்தத் தொடரில் லியாண்டர் பயஸ் ஜெலேனா ஒஸ்தாபென்கோவோ உடன் இணைந்து விளையாடுகிறார். முதல் சுற்றில் இந்த இணை ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் சாண்டர்ஸ் – மார்க் போல்மான்ஸ் ஜோடியை 6-7, 6-3, 10-6 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில் இரண்டாவது சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பயஸ்-ஜெலேனா ஜோடி அமெரிக்காவின் பெதானி மெட்டெக் சாண்ட்ஸ் – பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சாண்ட்ஸ்-முர்ரே ஜோடி 6-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் இரு ஜோடியும் மாறி மாறி கேம்களை வென்று வந்தனர். இதனால் இரண்டாவது செட் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் தலா 5 கேம்களை வென்று இருந்தனர்.

அதன்பின்னர் ஜேமி முர்ரே-சாண்ட்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அந்த ஜோடி இரண்டாவது செட்டை 7-5 என்று கைப்பற்றியது. ஒரு மணி நேரம் 7 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் 6-2,7-5 என்ற கணக்கில் முர்ரே-சாண்ட்ஸ் ஜோடி பயஸ்-ஜெலேனா இணையை வீழ்த்தியது.

2020ஆம் ஆண்டு உடன் சர்வதேச டென்னிஸ் தொடர்களிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள லியாண்டர் பயஸிற்கு இது கடைசி ஆஸ்திரேலியன் ஓபன் தொடராக அமைந்தது. இந்தத் தொடரில் இரண்டாவது சுற்றுடன் பயஸ் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனது கடைசி ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் ஒரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியுடன் முடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.