ஈட்டி எறிதலில் சிவ்பால் சிங் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தல் 

Update: 2020-03-11 00:44 GMT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சிவ்பால் சிங் பங்கேற்றார். இவர் முதல் மூன்று வாய்ப்புகள் சரியாக ஈட்டி எறியவில்லை. எனினும் இவர் தனது நான்காவது வாய்ப்பில் 81.50 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது கடைசி வாய்ப்பில் 85.47 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி தூரம் 85 மீட்டர் ஆகும். இதனைத் தாண்டியதால் சிவ்பால் சிங் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

சிவ்பால் சிங்

ஏற்கெனவே இந்தியா சார்பில் ஈட்டி எறிதலில் தேசிய சாம்பியன் நீரஜ் சோப்ரா கடந்த ஜனவரி மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார். நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்தார். இந்தச் சூழலில் தற்போது ஈட்டி எறிதலில் இரண்டாவது வீரராக சிவ்பால் சிங் தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவ்பால் சிங் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் சீனாவில் நடைபெற்ற உலக மிலிட்டரி கேம்ஸ் போட்டியில் தங்கம் பதக்கம் வென்று அசத்தினார். இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அசத்தியுள்ள சிவ்பால் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் 9ஆவது தடகள வீரர் சிவ்பால் சிங் ஆகும்.

நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தடகள் போட்டியில் இந்தியாவின் மற்றொரு ஈட்டி எறிதல் வீரரான அர்ஷ்தீப் சிங் 75.02 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து ஏமாற்றினார். அதேபோல மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த அனு சிங் 61.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இவர் ஒலிம்பிக் தகுதியான 64 மீட்டர் தூரத்தை சற்று தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.