மகளிர் கால்பந்து லீக்: தமிழகத்தின் சேது எஃப்சி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Update: 2020-02-06 09:02 GMT

மகளீர் கால்பந்து லீக்(ஐ.டிபிள்யூ.எல்)2020 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேது எஃப்சி அணி இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்புச் சாம்பியனான சேது எஃப்சி அணி பரோடா எஃப்ஏ அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே சேது எஃப்சி அணியின் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் சந்தியா முதல் கோலை அடித்தார். பின்னர் மீண்டும் 15ஆவது சந்தியா மீண்டும் ஒரு கோல் அடித்து ஸ்கோரை 2-0 என உயர்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 34ஆவது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திய அம்சவேனி சேது எஃப்சி அணியின் மூன்றாவது கோலை அடித்தார். முதல் பாதியின் முடிவில் சேது எஃப்சி அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் தமிழக வீராங்கனை சந்தியா கோல் அடித்து தனது மூன்றாவது ஹாட்ரிக் கோலை சாதனையைப் பதிவு செய்தார். அதன்பின்னர் 82ஆவது நிமிடத்தில் கார்த்திகா ஒரு கோலும், சந்தியா மீண்டும் ஒரு கோலும் அடித்தார்.

இறுதியில் சேது எஃப்சி அணி 6-0 என்ற கணக்கில் பரோடா எஃப்ஏ அணியை வீழ்த்தியது. இதன்மூலம் நடப்பு லீக் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள சேது எஃப்சி அணி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. மேலும் லீக் அணிகள் பட்டியலில் சேது எஃப்சி அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 15 புள்ளிகளுடன் கிரிப்சா எஃப்சி அணி உள்ளது. அந்த இதுவரை விளையாடி உள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது.

மேலும் இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சேது எஃப்சி அணியின் ஸ்டிரைக்கர் சந்தியா இதுவரை மொத்தமாக 13 கோல்கள் அடித்துள்ளார். அதிக கோல்கள் அடித்த வீராங்கனை பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கோகுலம் கேரளா எஃப்சி அணியின் சபித பண்டாரி (15கோல்கள்) உள்ளார்.