ஐடிடிஎஃப் கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வி அடைந்து சத்யன்-அமல்ராஜ் ஜோடி ஏமாற்றம் 

Update: 2020-03-05 13:41 GMT

ஐடிடிஎஃப் கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் சத்யன்,அமல்ராஜ், ஹர்மித் தேசாய், ஜீத் சந்திரா, சுஷ்மித் ஶ்ரீராம் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல மகளிர் பிரிவு போட்டிகளில் சுடிர்தா முகர்ஜி, மாதூரி பட்கர், ஶ்ரீஜா அகுலா மற்றும் கிருத்திகா ராய் உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரரான சரத் கமல் மற்றும் பெண்கள் பிரிவில் முன்னணி வீராங்கனை மோனிகா பட்ரா ஆகியோர் இத் தொடரில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறுவதற்காக தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அந்தோனி அமல்ராஜ் பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் தவிர சத்யன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் முதல்நிலை சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.

அதேபோல் மகளிர் பிரிவில் ஒற்றையரில் இந்திய வீராங்கனைகள் சுடிர்தா முகர்ஜி, அகுலா ஶ்ரீஜா, கிருத்திகா ராய் ஆகியோரும் முதல்நிலை சுற்றுடன் வெளியேறினர். இதனால் மகளிர் பிரிவில் பிரதான சுற்றுகளுக்கு யாருமே முன்னேறவில்லை.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன்-அமல்ராஜ் ஜோடி பிரதான சுற்றுகளுக்கு முன்னேறியது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஹாங்காங் நாட்டின் ஹோ-வாங் ஜோடியை எதிர்கொண்டனர். இப்போட்டியில் 11-9,11-3,11-4 என்ற கணக்கில் சத்யன்-அமல்ராஜ் ஜோடி தோல்வி அடைந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

இந்தியாவின் அந்தோனி அமல்ராஜ் இன்று இரவு நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் பிரேசிலின் கால்டெர்னோ ஹூஜை எதிர்கொள்கிறார். அமல்ராஜ் தன்னைவிட தரவரிசையில் முன்னிலையிலுள்ள வீரரை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. களப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்- மோனிகா பட்ரா இல்லாததால் , ஹர்மித் தேசாய்-சுடிர்தா முகர்ஜி ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடி முதல்நிலை சுற்றிலேயே தோல்வி அடைந்து பிரதான சுற்றுகளுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்தது.