ஐஎஸ்எல் 2020: பரபரப்பான அரையிறுதியில் எப் சி கோவாவினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னையின் எப் சி

Update: 2020-03-08 12:07 GMT

ஆறாவது சீசனாக நடக்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஏடிகே, எப் சி கோவா, பெங்களூரூ எப் சி, மற்றும் சென்னையின் எப் சி ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளனர். ஹோம், அவே என இரண்டு போட்டிகளாக நடக்கும் அரையிறுதி போட்டிகளில், சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியினை பந்தாடியது.

அரையிறுதியின் இரண்டாவது லெக் கோவாவிலுள்ள ஃபடோர்டா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றுது. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் கோவா வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினர். எதிர்பார்த்ததை போலவே கோல் அடிக்க அடுத்தடுத்து முயற்சி செய்தனர் எப் சி கோவா அணியினர். அதற்கு பலனாக 10ஆவது நிமிடத்தில் லுசியான் கோயன் அடித்த ஓன் கோல் மூலமாக அவர்களுக்கு முதல் கோல் கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த உற்சாகத்தினை பயன்படுத்தி மேலும் சிறப்பாக விளையாடி, 21ஆவது நிமிடத்தில் மாவுர்தடா ஃபால் கோவா அணியின் இரண்டாவது கோலினை அடித்தார்.

அதன்பின் முதல் பகுதியின் முடிவு வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தில் வெற்றிபெற மேலும் ஒரு கோல் மட்டுமே தேவை என்பதால் இரண்டாவது பகுதியினை உற்சாகமாக தொடங்கினர் கோவா அணியினர். சொந்த மண்ணில் விளையாடுவதால் ரசிகர்களின் கூக்குரலும் அவர்களுக்கு பெரும் பலத்தினை கொடுத்தது. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 52 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார் சென்னையின் எப் சி அணியின் ச்சாங்ட்டே. அந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு கோல் அடித்து கோவா அணிக்கு அதிர்ச்சி அளித்தார் சென்னை அணியின் டாப் கோல் ஸ்கோரர் நெர்கா வால்ஸ்கிஸ். அரங்கம் முழுவதும் அமைதியானது. சென்னையின் எப் சி அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான பொழுது, நாங்கள் கடைசி வரை போராடுவதை நிறுத்த மாட்டோம் என்பதை போல் 81 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினர் கோவா அணியினர். இதனால் ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக சென்றது. ஒவ்வொரு நொடியும் அனைவரது இதயத்துடிப்புகளை அதிகப்படுத்தியது.

ஆனால் ஆட்டத்தின் இறுதிவரை சென்னையின் எப் சி சிறப்பாக தடுப்பாட்டம் ஆடியதால் கோவா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இரண்டு லெக் ஆட்டங்களையும் சேர்த்து 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சென்னையின் எப் சி அணியினர். இதன்மூலம் மூன்று முறை ஐஎஸ்எல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக எந்தவொரு சென்னை வீரரும் இரண்டு மஞ்சள் அட்டைகள் வாங்கததால் இறுதிப்போட்டிக்கு முழு பலம் கொண்ட அணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பைனலும் கோவாவில் நடப்பதால் ஏற்கனவே அங்கு விளையாடிய அனுபவமும் கூடுதல் பலம்.

இதனால் வருகிற 14ஆம் தேதி அன்று கோவாவில் நடக்கும் இறுதிப்போட்டியில் வென்று மூன்றாவது முறையாக கோப்பையை சென்னையின் எப் சி கைப்பற்ற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் கனவாகும்.