ஐஎஸ்எல்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை-பெங்களூரு போட்டியில் வெல்லப் போவது யார்?

Update: 2020-12-04 02:12 GMT

கோவாவில் நவம்பர் 20 தொடங்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் ஆட்டங்கள் மெல்ல மெல்லச் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் பலம்வாய்ந்த சென்னையின் எப் சி மற்றும் பெங்களூரு எப் சி அணிகள் மோதுகின்றனர்.

பெங்களூரு அணி 2017 ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் இணைந்தது முதலே இவ்விரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு அணிகளும் மோதிய அனைத்து போட்டிகளிலும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனல் பறந்தது. இதில் முத்தாய்ப்பாக பெங்களூரு அணிக்கெதிரான 2017 ஐஎஸ்எல் இறுதிப்போட்டியில் அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது சென்னையின் எப் சி அணி. இந்த வெற்றியை சென்னையின் வீரர்களுடன் தமிழக கால்பந்து ரசிகர்கள் இணைந்து கொண்டாடி தீர்த்தது குறிப்பிடத்தக்கது. சென்னையின் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்த ரஃபேல் அகஸ்டோ கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாட சென்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

[embed]https://twitter.com/ChennaiyinFC/status/1334469860370178048[/embed]

இந்த சீசனைப் பொறுத்தவரை இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் தோற்காமால் இருந்தாலும், இரு அணிகளின் ஆட்டங்களும் வெவ்வேறு மாதிரியாகவே உள்ளது. சென்னையின் எப் சி அணியோ அதிரடியாக விளையாடி வரும் நிலையில் ஒரு வெற்றியும் பெற முடியாமல் திணறி வருகிறது பெங்களூரு எப் சி அணி. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்களது வெற்றிப் பயணத்தை தக்கவைத்து கொள்ள நிச்சயம் முற்படுவார்கள். ஐஎஸ்எல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட இவ்விரு அணிகளும் தங்களது ரசிகர்களுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கூடுதல் கடமையும் உள்ளதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க: ‘விவசாயத்தாலே தான் நாங்கள் முன்னேறினோம்’- அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை திருப்பி தரும் வீரர்கள்