ஐஎஸ்எல்: நேற்றைய போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ!

Update: 2020-11-23 04:16 GMT

இந்தியா கால்பந்து உலகில் மிகப்பெரிய அங்கமான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து போட்டிகளும் இங்கு நடைபெற இருக்கும் நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த எப் சி கோவா மற்றும் பெங்களூரு எப் சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி இரண்டு கோல்களை அடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. அப்போது கோவா அணியின் பயிற்சியாளர் ஒரு வீரரை களமிறக்கினார். அவர் வந்த பிறகு அணி புத்துணர்ச்சியுடன் விளையாடி இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. குறிப்பாக இரண்டாவது கோலுக்கு நேரடியாக அஸிஸ்ட் செய்த அந்த வீரரின் பெயர் நிச்சயம் தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒன்றாகும். அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ்.

இது இவரது கால்பந்து கரியருக்காக திண்டுக்கல்லிருந்து சென்னைக்கு வந்த அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. குறிப்பாக அவரது மாமாவிற்கு, அவர் தான் சிறு வயது முதலே ரோமாரியோவினை ஒரு கால்பந்து வீரர் ஆக்கவேண்டும் என கனவு கண்டார். மேலும் புகழ்பெற்ற பிரேசில் வீரர் ரோமாரியோவின் பெயரை இவருக்கு சூட்டியது குறிப்பிடத்தக்கது. தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சென்னை சிட்டி எப் சி அணியின் 2018- 19 ஐ லீக் பட்டம் வென்ற வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நடுகள ஆட்டக்காரரான இவரது அதிரடி ஆட்டங்களை கண்டு ரசிகர்கள் நமது நெய்மார் எனச் செல்லப் பெயர் வைத்தனர்.

இதனை தொடர்ந்து எப் சி கோவா அணியினால் வாங்கப்பட்ட இவர் அங்கிருந்து பழைமை வாய்ந்த மோகன் பகான் அணிக்காக விளையாட லோனில் அனுப்பப்பட்டார். அங்கும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மீண்டும் 2019-20 ஐ லீக் பட்டம் வென்றார். தற்போது ஐஎஸ்எல் தொடரில் முதன் முறையாக விளையாடும் இவர், தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பினையே வீணாக்காமல் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். இதேபோல் இவரது அதிரடி ஆட்டங்களை தொடர்ந்து காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

மேலும் படிக்க: ஐஎஸ்எல் 2020 – 21: சென்னையின் எப் சி அணி – ஒரு பார்வை