ஐஎஸ்எல்: தவறுகளை சரி செய்து மும்பைக்கு எதிராக வெற்றி பெறுமா சென்னையின் எப்சி?

Update: 2020-12-09 03:13 GMT

கோவாவில் நடந்து வரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எப் சி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்று விதமான முடிவுகள் வந்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் ஒரே வீரர்கள் கொண்ட முதல் அணியினையே மேனேஜர் லாஸ்லோ ஆடவைத்தார். முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறிது சொதப்பினார்கள்‌. குறிப்பாக அணியின் கேப்டன் ரஃபேல் கிரிவெல்லாரோவின் ஆட்டம் அத்துனை சிறப்பானதாக இல்லை.

மேலும் பெங்களூரு எப் சி அணிக்கெதிரான போட்டியில் துவக்கத்திலேயே நட்சத்திர வீரர் அனிருத் தாபா காயமடைந்ததும் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தடுப்பாட்ட வீரர்கள் தங்கள் பணியை செய்தாலும் முன்கள வீரர்கள் கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளையும் தவறிவிட்டனர். அத்தோடு ரசிகர்களின் ஆஸ்தான வீரரான தமிழகத்தின் எட்வின் கடந்த ஆட்டத்தில் எதிரணி பெனால்டி வழங்கி தவறு செய்தார். இதேபோல் கடந்த ஆட்டங்களில் செய்த சிறு சிறு தவறுகளை சரி செய்து கொண்டு மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை அணி சிறப்பாக விளையாட வேண்டும்.

[embed]https://twitter.com/ChennaiyinFC/status/1336294581508304896[/embed]

நாளை சென்னையின் அணியினை எதிர்த்து ஆடவிருக்கும் மும்பை அணியோ இத்தொடர் தொடங்கும் முன்னரே கோப்பை வெல்லப் போகும் அணி எனப் பலரால் கருதப்பட்டது. ஆனால் தங்களது முதல் ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்த நிலையில் அடுத்த மூன்று ஆட்டங்களிலும் சுதாரித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இந்த மூன்று ஆட்டங்களிலும் எதிரணியினை ஒரு கோல் கூட அடிக்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் மேனேஜர் லோபேராவும் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் அணியை தயார்படுத்தி வருகிறார். இந்த பலம் வாய்ந்த அணியை எதிர்த்து ஆடவிருக்கும் சென்னையின் அணி 90 நிமிடங்கள் முழுவதும் கடந்த போட்டிகளில் செய்த எந்த தவறுகளையும் செய்யாமல் சிறப்பாக ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.