ஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி

Update: 2020-11-24 03:40 GMT

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும் தமிழகக் கால்பந்து ரசிகர்களைகப் பொறுத்தவரை இன்று தான் முதல் ஆட்டம். காரணம், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது.

இந்த சீசனுக்கான முதல் ஆட்டம் என்பதையும் தாண்டி ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான இந்த ஆட்டத்தின் மேல் வேறு சில எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் கடந்த சீசனில் சென்னை அணியின் அபார ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இரண்டு முக்கிய தூண்களாக இருந்த மேனேஜர் ஓவன் காயல் மற்றும் கோல்டன் பூட் வென்ற நேர்கா வால்ஸ்கிஸ் ஆகிய இருவரும் தற்போது ஜாம்ஷெட்பூர் அணியில் இணைந்துள்ளனர். மேலும் அங்கு விளையாடிய பிரேசில் நாட்டினைச் சேர்ந்த மெமோ மவுரா தற்போது சென்னை அணிக்காக விளையாடவுள்ளார். அவர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை காணவும் மேலும் புதிதாக வந்த வீரர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

இந்த போட்டியில் ஒரு சாதனை படைக்க இரு அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. இந்த சீசனில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அடிக்கப்பட்ட ஏழு கோல்களுமே வெளிநாட்டு வீரர்களால் அடிக்கப்பட்டது. எனவே இந்த சீசனில் இந்திய வீரர் ஒருவர் மூலம் முதல் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு இன்று அதிகமாக உள்ளது. மேலும் சென்னையின் எப் சி அணியில் தரமான பல இந்திய வீரர்கள் இருப்பதால் இந்த சாதனையை நிகழ்த்த அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கால்பந்து ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க: ஐஎஸ்எல் போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ!