ஐபிஎல்: ‘டிராப் கேட்ச் டூ அரைசதம்’- ட்ரோலுக்கு திவேட்டிய பாணியில் பதிலளித்த விஜய் சங்கர் 

Update: 2020-10-23 02:41 GMT

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் கொடுத்த கேட்சை விஜய் சங்கர் தவறவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் அவரை ரசிகர்கள் வசைப்பாட தொடங்கினர். இவரை பலரும் ட்விட்டரில் ட்ரோல் செய்ய தொடங்கினர். ஏனென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் விஜய் சங்கர் சரியாக விளையாடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டுலும் ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் சிறப்பாக சொபிக்கவில்லை. இதனையடுத்து பந்துவீச வந்த விஜய் சங்கர் ஜோஸ் பட்லரை விக்கெட்டை எடுத்தார்.

அத்துடன் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின் போது தன்னை ட்ரோல் செய்த ரசிகர்களுக்கு தனது சிறப்பான பேட்டிங் மூலம் விஜய் சங்கர் பதிலளித்தார். இப்போட்டியில் மணீஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்து விஜய் சங்கர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சன்ரைசர்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அரைசதம் கடந்து விஜய் சங்கர் அசத்தினார்.

இந்தப் போட்டி குறித்து விஜய் சங்கர், “இது எனக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. ஏனென்றால் நடப்புத் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. எனவே இந்தப் போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று கருதினேன். மணீஷ் பாண்டே சிறப்பாக விளையாடி வந்தார். எனவே அவருடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தேன்.

அதைப் போல நாங்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றோம். இந்தப் போட்டியில் ஆர்ச்சர் போன்ற சிறப்பான பந்து வீச்சாளரை எதிர்கொண்டதன் மூலம் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர் திவேட்டியா ரசிகர்கள் செய்த ட்ரோலுக்கு அதேப் போட்டியில் தனது பேட்டிங் மூலம் பதிலளித்தார். தற்போது விஜய் சங்கரும் அதேபோல ஒரே போட்டியில் தனது ட்ரோலுக்கு ஆட்டத்தின் மூலம் பதிலளித்து அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க: ஐபிஎல்: ஒரே போட்டியில் 2 மெய்டன் வீசி அசத்திய ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிராஜ்!