ஐபிஎல்: ‘மை கொவிட் ஹீரோஸ்’ ஜெர்ஸியுடன் களமிறங்கும் கோலியின் ஆர்.சி.பி

Update: 2020-09-21 07:04 GMT

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை யுஏஇயில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொரோனா வைரஸ் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பல பணியாளர்களை கௌரவிக்க உள்ளது. இதுதொடர்பாக அந்த அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் எங்களது அணியின் வீரர்கள் ‘மை கொவிட் ஹீரோஸ்’ என்ற ஜெர்ஸியுடன் விளையாடுவார்கள்.

போட்டிக்குப் பிறகு இந்த ஜெர்ஸியை ஏலம் விட்டு அதில் வரும் வருமானம் அனைத்தையும் கொரோனா தொடர்பான பணிகளுக்கு அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, “கடந்த நான்கு மாதங்களாக கொரோனா முன்கள பணியாளர்களின் கதைகளை கேட்டு நான் மிகவும் வியப்படைந்தேன். அவர்கள் தான் களத்தில் பல சவால்களை சந்திக்கும் உண்மையான சேலஞ்சர்ஸ். எனவே ‘மை கொவிட் ஹீரோஸ்’ ஜெர்ஸியை அணியை நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். இது நாங்கள் அவர்களுக்கு செய்யப் போகும் மிக பெரிய சமர்ப்பணம். இதன்மூலம் எங்களது நன்றியை நாங்கள் அவர்களுக்கு தெரிவிக்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சமூக சார்ந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஐபிஎல் தொடரில் கலக்கும் ஒரே பெண் பிசியோதெரபிஸ்ட் அனுஜா !