ஐபிஎல்: ‘பஞ்சாப் அணியில் ஷாரூக் கான்’- மகிழ்ச்சியில் பிரீத்தி ஜிந்தா

Update: 2021-02-18 13:58 GMT

ஐபிஎல் 2021-ஆம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஷாரூக் கான் 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவரை ஏலத்தில் எடுத்த உடன் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, “எங்கள் அணியில் ஷாரூக் கான்” எனக் கூறி மகிழ்ந்தார். ஐபிஎல் தொடரில் நடிகர் ஷாரூக் கானிற்கு சொந்தமாக கொல்கத்தா அணி உள்ளது. இதனைக் குறிப்பிட்டு பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். இந்தச் சூழலில் யார் இந்த ஷாரூக் கான் எவ்வாறு தமிழ்நாடு அணிக்குள் நுழைந்தார்?

1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஷாரூக் கான். இவருடைய தாய் மற்றும் அவருடைய சகோதரிகள் நடிகர் ஷாரூக் கானின் தீவிர ரசிகையாக இருந்ததால் இவருக்கு அந்தப் பெயரையே வைத்தனர். பின்னாலில் அதுவே இவரை கிரிக்கெட் போட்டியின் போது கிண்டல் செய்ய மிகவும் ஏதுவாக அமைந்தது.

13வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியில் முதல் முறையாக ஷாரூக் கான் இடம்பெற்றார். அதில் சிறப்பாக விளையாடி வந்த ஷாரூக் கான் 2013ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பிஹார் தொடரில் தமிழ்நாடு சார்பில் களமிறங்கினார்.

இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 624 ரன்கள் அடித்து ரன் மழை பொழிந்தார். அத்துடன் 18 விக்கெட்களையும் வீழ்த்தி ஒரு ஆல்ரவுண்டராகவும் இவர் பிரகாசித்தார். எனினும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மனம் உடைந்த ஷாரூக் கான் சற்று வருத்தத்தில் இருந்தார். எனினும் தமிழ்நாடு அணி சார்பாக விஜய் ஹாசரே தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு டி20 அணியிலும் இவர் இடம்பிடித்தார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரிலும் களமிறங்கிய ஷாரூக் முதல் சீசனில் சரியாக விளையாடவில்லை.இரண்டாவது சீசனில் அசத்திய ஷாரூக் கான் 325 ரன்கள் அடித்து மீண்டும் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். இவரின் அதிரடி ஆட்டம் டி20 போட்டிகளுக்கு ஏதுவாக இருக்கும்.தற்போது முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ஷாரூக் கான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் தற்போது அவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் சாதித்து இந்திய அணியில் இடம்பெறுவாரா என்பதை பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க: கட்டட தொழிலாளியின் மகள் யு-20 நடைப் போட்டியில் சாதனையை முறியடித்து அசத்தல்!