ஐபிஎல்: நீளமான முடியுடன் ரசிகர்களை கவர்ந்த ஆண் நடுவர்- குழப்பத்தில் ட்விட்டர் ரசிகர்கள்

Update: 2020-10-19 02:52 GMT

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஷ்சிம் கிரீஷ் பதக் நடுவராக செயல்பட்டார். இந்தப் போட்டியில் வீரர்களின் ஆட்டத்தைவிட இவர் தான் ட்விட்டரில் பேசு பொருளாக மாறியுள்ளார். அப்படி என்ன செய்தார் இவர்? யார் இவர்?

மும்பையைச் சேர்ந்த 43வயதான பஷ்சிம் பதக் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் ஹெல்மெட் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது முதல் முறையாக நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று இவர் நடுவராக செயல்பட்டார். இந்தப் போட்டியில் இவரது தோற்றம் மற்றும் ஸ்டைல் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இவரது நீளமான முடி அனைவரையும் கவர்ந்தது. அத்துடன் இவர் குனிந்து நின்றது நடுவராக செயல்பட்டது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் இவர் கொடுக்கும் சைகைகளும் மிகவும் ஸ்டையிலாக இருந்ததால் ட்விட்டரில் இவர் குறித்து ரசிகர்கள் பலர் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். ஒரு ரசிகர் ட்விட்டரில், “சன்ரைசர்ஸ்-கொல்கத்தா போட்டியில் நடுவர் பதக் சிறப்பாக விளையாடினார்” எனப் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு ரசிகர், “நான் தவறுதலாக ஒரு பெண் நடுவர் இந்தப் போட்டியில் இருக்கிறார் என்று நினைத்தேன். அவரின் நீளமான முடி மற்றும் நிற்கும் ஸ்டைல் இதனைப் பார்த்து பெண் நடுவர் என்று நினைத்து விட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ‘படிக்கல் டூ நடராஜன்’- குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதித்த உள்ளூர் வீரரகள்