ஐபிஎல்: முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற டெல்லி அணியை ட்விட்டரில் பாராட்டும் ரசிகர்கள்!

Update: 2020-11-09 03:47 GMT

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அத்துடன் முதல் முறையாக டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இந்நிலையில் டெல்லி அணியின் வெற்றியை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ஒருவர், “13 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, “பல ஆண்டுகளின் ஏமாற்றத்திற்கு பிறகு டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. லீக் சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்த அணி தற்போது இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், “நாளைய இறுதிப் போட்டியில் எந்த முடிவு வந்தாலும், இனி வரும் ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்துவது உறுதி. முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள டெல்லி அணிக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி குவாலிஃபயர் போட்டியில் தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தை பிடித்தது. இதனால் டெல்லி அணியின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தாண்டு டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: வருண் டூ பும்ரா’-2020 ஐபிஎல் தொடரின் டாப்-5 சிறந்த ஸ்பெல்கள் !