ஐபிஎல்: லீக் சுற்றில் மறக்க முடியாத டாப் 5 போட்டிகளின் ஃபிளாஷ்பேக்

Update: 2020-11-04 02:59 GMT

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை முதல் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் நடப்பு தொடரில் மறக்க முடியாத டாப் 5 லீக் போட்டிகள் என்ன?

5. டெல்லி vs பஞ்சாப்:

நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியே மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி அடித்த 157 ரன்களை மாயங்க் அகர்வாலின் அதிரடியால் பஞ்சாப் அணி சமன் செய்தது. இதனைத் தொடர்ந்து 13ஆவது ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர் நடைபெற்றது. சூப்பர் ஓவரில் ரபாடாவின் அசத்தலான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றிப் பெற்றது. இந்த ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானதாக அமைந்தது.

4. சன்ரைசர்ஸ் vs கொல்கத்தா:

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக் மற்றும் மோர்கன் அதிரடியால் 163 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் இறுதியில் சற்று சொதப்பியது. இந்தப் போட்டியில் நடுகள ஆட்டக்காரராக களமிறங்கி வார்னர் போட்டியை சூப்பர் ஓவருக்கு எடுத்து சென்றார். சூப்பர் ஓவரில் கொல்கத்தாவின் ஃபெர்குசன் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெற செய்தார்.

3. பெங்களூரு vs மும்பை:

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணியில் ஃபின்ச்,படிக்கல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் பெங்களூரு அணி 201 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்த இமாலய இலக்கை விரட்டிய மும்பை அணி சற்று தடுமாறியது. எனினும் இறுதியில் பொல்லார்டு மற்றும் கிஷன் அதிரடியால் மும்பை அணி 201 ரன்கள் எடுத்து சமன் செய்தது. இதனையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்று அசத்தியது.

2. ராஜஸ்தான் vs பஞ்சாப்:

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி மாயங்க் அகர்வாலின் சதத்தால் 223 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிகமான ஸ்கோரை சேஸ் செய்து ராஜஸ்தான் அணி வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி காட்டினர். எனினும் இறுதி கட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. அந்த சமயத்தில் 18ஆவது ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி ராகுல் திவாட்டியா அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி வரலாற்று சேஸ் செய்து வெற்றிப் பெற்றது.

1. மும்பை vs பஞ்சாப்:

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி டிகாக்கின் அரைசதம் மற்றும் பொல்லார்டு அதிரடியால் 176 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் பும்ராவின் 3 விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இறுதியில் பஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். எனினும் பேட்டிங்கில் மும்பை அணி தடுமாறியது. இதனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதனையடுத்து புதிய விதிகளின்படி இரண்டாது சூப்பர் ஓவர் நடந்தது. அதில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியை பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி நடப்பு ஐபிஎல் மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே சிறப்பானதாக அமைந்தது.

மேலும் படிக்க: ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் மற்ற வீரர்களுக்கு ஏன் ஜெர்ஸியை கொடுத்தேன்? – மனம்திறந்த தோனி