ஐபிஎல் 2020 டாப் 5 இந்திய பந்துவீச்சாளர்கள் யார்? யார்?

Update: 2020-10-31 06:24 GMT

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் வரும் 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தற்போது வரை நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் லீக் சுற்றில் கடைசி கட்ட போட்டிகள் அதிக எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக அசத்தி வரும் இந்திய பந்துவீச்சாளர்கள் யார்? யார்?

5. ராகுல் சாஹர் (14 விக்கெட்):

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நல்ல துணையாக சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் அமைந்துள்ளார். இவர் சில போட்டிகளில் ரன் விகிதத்தை கட்டுபடுத்தினாலும் பல போட்டிகளில் முக்கிய விக்கெட்களையும் வீழ்த்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் ராகுல் சாஹர் 14 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

4. வருண் சக்ரவர்த்தி(15 விக்கெட்):

கொல்கத்தா அணியின் சுழல் சூறாவளியாக வருண் சக்ரவர்த்தி உருவெடுத்துள்ளார். இவர் முன்னணி பந்துவீச்சாளர் சுனில் நரேனை பின்னுக்கு தள்ளி அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் வருண் தான். இவர் இதுவரை 12 போட்டிகளில் 15 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

3. யுஸ்வேந்திர சாஹல் (18 விக்கெட்):

பெங்களூரு அணி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு சாஹலின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம். நடு ஓவர்களில் பெங்களூரு அணிக்கு தேவையான விக்கெட்களை வீழ்த்தி சாஹல் உதவி வருகிறார். அத்துடன் ரன் விகிதத்தை குறைக்கவும் சாஹல் உதவி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 18 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

2. முகமது ஷமி (20 விக்கெட்):

நடப்பு ஐபிஎல் தொடர் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களின் தொடராக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்பிளேயிலே சில விக்கெட்களை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் நல்ல துவகத்தை முகமது ஷமி அளித்து வருகிறார். இவர் 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

1.ஜஸ்பிரீத் பும்ரா(20 விக்கெட்):

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கி வருபவர் பும்ரா. மலிங்கா இல்லாத குறையை பும்ரா சிறப்பாக சரி செய்து வருகிறார். ஐபிஎல் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் சிறப்பான ஃபார்மை எட்டியுள்ளார். டெர்த் ஓவர்களில் தனது வேகமான யார்க்கர் மற்றும் மிதவேகப்பந்து மூலம் பேட்ஸ்மென்களை பும்ரா திணறடித்து வருகிறார். இவர் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 20 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இவர்கள் தவிர நடப்பு ஐபிஎல் தொடரில் நடராஜன், முகமது சிராஜ், முருகன் அஸ்வின் என மேலும் சில இந்திய வீரர்களும் பந்துவீச்சில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மதிக்கதக்க வீரர் தோனி, சர்ச்சைக்குரிய வீரர் ஹர்திக்- ஆய்வு தகவல்