ஐபிஎல்: சஞ்சு சாம்சன் வாழ்க்கையை மாற்றிய கோலியின் அறிவுரை

Update: 2020-10-21 04:50 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றிப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது. ராஜஸ்தான் அணியின் முதல் இரண்டு போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி அசத்தினார். குறிப்பாக ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கும் மேல் சேஸ் செய்த போது அணியின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில் தனது வெற்றி ரகசியம் தொடர்பாக சஞ்சு சாம்சன் அன்மையில் மனம்திறந்தார். இதுகுறித்து அவர், “ஒருநாள் நானும் விராட் கோலியும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது நான் கோலியிடம் நீங்கள் ஏன் உங்களுடைய உடற் தகுதியில் இவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள்? எனக் கேட்டன்.

அதற்கு அவர் நீ இன்னும் எவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாட போகிறாய் என்று என்னை பார்த்து கேட்டார். நான் இன்னும் ஒரு பத்தாண்டுகள் விளையாடுவேன் என்று கூறினேன். அதற்கு கோலி, அப்போது நீ இந்த பத்தாண்டுகள் உன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து விளையாடு. அதற்கு பிறகு உனக்கு பிடித்த கேரள உணவை சாப்பிடலாம். இந்த பத்தாண்டுகளுக்கு பிறகு நீ கிரிக்கெட் விளையாட போவதில்லை. எனவே இந்தப் பத்தாண்டுகள் உன் வாழ்வில் மிகவும் முக்கியமானவை என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கு பிறகு எனக்கு கிரிக்கெட் மீது இருந்த அணுகுமுறையே மாறியது. அவ்வளவு பெரிய வீரரிடமிருந்து இந்த வார்த்தையை கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமும் அமைந்தது” எனக் கூறினார்.

கேரளாவில் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளுக்கு சஞ்சு சாம்சன் மகனாக பிறந்தார். தனது தந்தையை பார்த்து சாம்சனும் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று நினைத்துள்ளார். எனினும் அவருக்கு சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாட்டு சிறப்பாக வந்ததால், அதில் தீவிரமாக இருந்தார். இதன் பயனாக தற்போது இந்தியாவின் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் நட்சத்திரமாக சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார்.

மேலும் படிக்க: பள்ளியின் கழிப்பறையை சீரமைத்து அசத்திய சின்ன ‘தல’ ரெய்னா