ஐபிஎல்: ஆர்.ஜே.பாலாஜியின் காமெடியான கமெண்ட்ரி ஜோக்ஸ் எல்லை மீறுகிறதா?

Update: 2020-10-07 05:35 GMT

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக கிரிக்கெட் போட்டியின் போது வீரர்களின் ஆட்டத்துடன் வர்ணனையாளர்கள் பேச்சையும் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். இதற்கு உதராணம் டோனி கிரேக்கின் வர்ணனைக்கு பல பேர் அடிமையாக இருந்தனர். அவரின் உற்சாகமான வர்ணனை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் செனலில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இதில் பிரபல ஆர்.ஜே பாலாஜி சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் வர்ணனை செய்து வருகிறார். இவர் கிரிக்கெட் உடன் சினிமா சார்ந்த விஷயங்களை வைத்து வர்ணனை செய்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் அவ்வாறு தனது வர்ணனை மூலம் பலரை கவர்ந்து வருகிறார்.

குறிப்பாக வெளிநாட்டு வீரர்களின் பெயரை அவர் உச்சரிக்கும் விதம் அனைவரையும் அதிக கவர்ந்துள்ளது. அத்துடன் சிக்சர் அடித்தவுடன் பந்து வெளியே சென்றால் பந்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் என நகைச்சுவையை கூறுவார். மேலும் அந்தப் பணத்தை வைத்து நான் இந்த மாதத்தின் மின்சார கட்டணத்தை செலுத்தி விடுவேன் என்ற சமூக பிரச்னையையும் சிறப்பாக கூறுகிறார்.

எனினும் இம்முறை இவரது வர்ணனை சற்று எல்லை மீறுவதாக அமைந்துள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், “படிக்கல் அடிக்கல் நாட்டுவாரா?.. ரங்கராஜ் பாண்டேவை விட மனீஷ் பாண்டே நல்லா பீல்டிங் பண்ணுவாரு.. கேதாரோ ஆரோரோ-னு நீங்க போடுற மொக்க ரைமிங் எல்லாம் கூட பிரச்சனை இல்ல..ஆனா Black Players ah அசிங்கமா நீங்க பன்ற Body Shaming ah பாத்திட்டு அப்டியே விட்டுட்டு போக முடியாது.

அதுவும் நேத்தைய மேட்ச் முழுக்க Kiaran Pollard ah உருவத்தை வச்சு நீங்க பண்ணினதெல்லாம் உங்களோட ஆழ்மன வக்கிரம். English Commentary la இதுவரைக்கும் யாராச்சும் ஒரு commentator பிளேயரோட body, color, size பத்தி பேசி நீங்க பாத்திருக்கீங்களா? ஏன்னா, அவங்களுக்கு தெரியும் Birth, Color, Country, Language, Size இது எதுவுமே முக்கியம் கிடையாது கிரிக்கெட்டுக்கு, Only Skill & Sprit மட்டும் தான்.” என்று ஆழமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

பொதுவாக விளையாட்டு வீரர்களின் ஆட்டத்தை விமர்சிப்பதை யாரும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால் விளையாட்டு வீரர்களின் தோற்றம் ஆகியவை குறித்து விமர்சிப்பது வர்ணனையாளரின் வேலையில்லை எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். பொழுதுபோக்கு காரணங்களுக்காக வர்ணனையாளர் சிலவற்றை கூறும் போது அது எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. சமீபத்தில் பெங்களூரு போட்டியின் போது விராட் கோலியின் ஆட்டம் தொடர்பாக கவாஸ்கர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனவே வர்ணனையாளர்கள் வீரர்களின் ஆட்டம் தொடர்பாக மட்டும் கருத்துகளை தெரிவிப்பது தான் கிரிக்கெட் விளையாட்டின் மாண்பை சிதைக்காமல் இருக்கும் என்று கருத்தப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழக இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்