ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் மற்ற வீரர்களுக்கு ஏன் ஜெர்ஸியை கொடுத்தேன்? - மனம்திறந்த தோனி

Update: 2020-11-03 12:46 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஞாயிற்றுகிழமை தனது கடைசி லீக் போட்டியில் பங்கேற்றது. அப்போது டாஸின் போது வர்ணனையாளர் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இது தான் சிஎஸ்கேவிற்கு நீங்கள் விளையாடும் கடைசி போட்டியா? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு தோனி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்ற பதிலை அளித்தார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

நடப்புத் தொடரில் ஒவ்வொரு போட்டிகளுக்கு பிறகும் தோனி தனது ஜெர்ஸியை மற்ற அணியின் வீரர்களுக்கு வழங்கி வந்தார். இதனால் இதுதான் அவரது கடைசி ஐபிஎல் தொடர் என்று பலர் கருதி வந்தனர். சென்னையின் கடைசி லீக் போட்டியின் முடிவில் தோனி இது தொடர்பாக மனம் திறந்துள்ளார்.

அதில், “நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததால், ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துவிடுவேன் என்று வீரர்கள் நம்பினர். அதனால் அவர்களிடன் என்னிடமிருந்து ஜெர்ஸியை பெற்றுக் கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி களமிறங்குவார் என்று தெளிவாகியுள்ளது.

ஏற்கெனவே மோசமான சீசன் என்ற சோகம் சென்னை ரசிகர்களை வாட்டி வருகிறது. இதில் தோனி தனது ஓய்வை அறிவிக்காதது மட்டும் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘தெரு கிரிக்கெட் டூ உலகக் கோப்பை கிரிக்கெட்’- மகளிர் ஐபிஎல் தொடரில் களமிறங்கும் தமிழ்நாட்டு வீராங்கனையின் பயணம்!