ஐபிஎல் தொடரில் கலக்கும் ஒரே பெண் பிசியோதெரபிஸ்ட் அனுஜா !

Update: 2020-09-20 10:48 GMT

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் நேற்று தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இம்முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெறவில்லை. இந்தத் தொடருக்காக ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் யுஏஇ சென்று பயிற்சியை தொடங்கினர்.

கொரோனா காலத்தில் வீரர்களின் நலனில் அனைத்து அணிகளும் தீவிர முன்னேச்சரிக்கை ஏற்பாட்டுடன் உள்ளனர். இந்த அணிகளில் வீரர்களின் நலனை அதிகம் பாதுகாப்பவர்கள் அணியின் பிசியோதெரபிஸ்ட் தான். அந்தவகையில் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்டாக அனுஜா தல்வி இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் பிசியோதெரபிஸ்ட் அனுஜா தான்.

34 வயதான அனுஜா தல்வி ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபியில் மும்பையில் இளங்கலை பட்டமும் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டமும் படித்துள்ளார். இவர் கிட்டதட்ட 11ஆண்டுகளுக்கும் மேலாக பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் அனுஜா ‘கல்ஃப் நியூஸ்’ தளத்திற்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்தாண்டு முதல் முறையாக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் டீமில் இடம்பெற்றுள்ளேன். நான் கொரோனா தொடர்பான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயோ பபுள் தொடர்பான விஷயங்களை கவனித்து வருகின்றேன்.

இதற்கு முன்பாக புரோ கபடி லீக் உள்ளிட்ட தொடர்களில் நான் வேலை செய்துள்ளேன். ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஐபிஎல் தொடர் வேலை மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. என்னை பொருத்தவரை பிசியோதெரபிஸ்ட் பணியில் ஆண் பெண் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. யார் தங்களது பணியை சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் நல்ல வாய்ப்பு வரும்.

2009 ஆம் ஆண்டு மும்பை கிரிக்கெட் சங்கம் பல ஆண் பிசியோதெரபிஸ்ட்கள் இருத்தும் பிசிசிஐ பணிக்கு என்னை பரிந்துரைத்தது. அதற்கு காரணம் என்னுடைய வேலை தான். ஆகவே இதில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் என்னுடைய 11 ஆண்டுகளுக்கு மேலான இந்த விளையாட்டு பிசியோதெரபிஸ்ட் பயணத்தில் அந்த மாதிரி பாகுபாட்டை நான் சந்திக்கவில்லை. அத்துடன் பல ஆண் வீரர்களுடன் நான் சேர்ந்து பணி செய்திருக்கிறேன். அப்போது ஒரு முறை கூட நான் சங்கடப்படும் மாதிரியான சூழல் உருவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அனுஜா தல்வி கிரிக்கெட் தவிர டேபிள் டென்னிஸ், தடகளம், டென்னிஸ், துப்பாகி சுடுதல் உள்ளிட்ட பல ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் பிசியோதெரபிஸ்டாக பணி செய்துள்ளார்.

மேலும் படிக்க: மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு – களத்தில் குதித்த ஐபிஎல் அணி