ஐபிஎல்: 'படிக்கல் டூ நடராஜன்'- குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதித்த உள்ளூர் வீரரகள்

Update: 2020-10-17 03:34 GMT

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் கொலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அனுபவம் வாய்ந்த் வீரர்களைவிட குறைந்த அனுபவம் பெற்ற உள்ளூர் வீரர்கள் சிறப்பாக கலக்கி வருகின்றனர். அதிலும் மிகவும் குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் அணிக்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளனர். அவ்வாறு குறைந்த விலையில் ஏலம் எடுக்கப்பட்டு அணிக்கு அதிக பலம் சேர்த்த வீரர்கள் யார்? அவர்கள் என்ன செய்தனர்?

தேவ்தத் படிக்கல்

நிழற்படம்: ஐபிஎல்

20 வயதே ஆன தேவ்தத் படிக்கல் ஆர் சி பி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருபவர். இடக்கை ஆட்டக்காரரான இவரை அவரது அடிப்படை விலையான 20 லட்சம் கொடுத்து 2019 ஆண்டு ஆக்ஷ்னில் வாங்கினர். அந்த சீசனில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து டொமஸ்டிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தது, அதை வீணடிக்காமல் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். இதுவரை ஏழு ஆட்டங்களில் 247 ரன்கள் குவித்துள்ளார்.

அப்துல் சமாத்

அப்துல் சமாத் (நிழற்படம்: ஐபிஎல்)

காஷ்மீரினை சேர்ந்த18 வயதே ஆன அதிரடி ஆட்டக்காரரான இவரை இவரது அடிப்படை விலையான 20 லட்சம் கொடுத்து 2020 ஆக்ஷ்னில் வாங்கினர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர். இர்ஃபான் பதான் மூலம் கண்டறிய பட்ட வீரர் கடந்த ரஞ்சி சீசனில் 36 சிக்ஸ்ர்கள் விளாசினார். பதான் மற்றும் மிலாப்பின் அறிவுறுத்தல் மூலம் விவிஎஸ் லக்ஷ்மனால் அணியில் எடுக்கப்பட்ட இவர் தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளிலும் நிறைவான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

ரியான் பராக்

நடுகள ஆட்டக்காரரான இவர் ஆஃப் ஸ்பின் பந்து வீசவும் செய்வார். யு-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதினால் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் எடுக்கப்பட்ட இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடியதின் மூலம் இந்த ஆண்டிற்கான அணியில் தக்கவைக்க பட்டார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. நடப்புத் தொடரில் ரியான் பராக் பேட்டிங்களில் இக்கட்டாண சூழ்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு உதவி வருகிறார். இவரும் ராகுல் திவாட்டியாவும் ராஜஸ்தான் அணிக்கு மேட்ச் வின்னர்களாக உருவெடுத்துள்ளனர். இந்தத் தொடரில் ரியான் பராக்கின் பிஹூ நடனம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கராசு நடராஜன்

29 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர்தான் இந்த ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரர். 2017 டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 3 கோடி கொடுத்து பஞ்சாப் அணியினால் எடுக்கப்பட்டார். ஆனால் அங்கே சரியாக விளையாட முடியாததால் அணியிலிருந்து விலக்கப்பட்டார். அடுத்த ஆக்ஷ்னில் 40 லட்சம் கொடுத்து சன்ரைசர்ஸ் அணியினால் எடுக்கப்பட்டார், அங்கும் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை வாய்ப்பு கிடைத்தவுடன் அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

ராகுல் திவாட்டியா

மொழி அகராதியில் திவாட்டியா என்ற வார்த்தையை சேர்க்கும் அளவுக்கு இந்த சீசனில் இவரது ஆட்டம் இருந்துள்ளது. 3 கோடி கொடுத்து கடந்த ஆக்ஷ்னில் டெல்லி அணியால் எடுக்கப்பட்ட இவர் சுமாராக ஆடியிருந்தாலும் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்பட்டார். இந்த முறை தனது ஆட்டத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இதுவரை 205 ரன்கள் குவித்துள்ள இவர் 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

ரவி பிஷ்னோய்

2019 யு-19 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசியதின் மூலம் அனைவரது கவனம் ஈர்த்த இந்த 20 வயதான லெக் ஸ்பின்னரை 2 கோடி கொடுத்து ஆக்ஷ்னில் எடுத்தனர் பஞ்சாப் அணியினர். அனில் கும்ளேவின் வழிகாட்டுதலில் இதுவரை சிறப்பாக பந்துவீசி வருகிறார். குறைவான ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க: முருகன் அஸ்வினின் வாழ்க்கையை மாற்றிய ஜிஆர்இ தேர்வு!