ஐபிஎல்: ‘ஹர்பஜன்-ஶ்ரீசாந்த் டூ கோலி-சூர்யா’ - களத்தில் வலுத்த இந்திய வீரர்களின் மோதல்!

Update: 2020-11-01 03:07 GMT

ஐபிஎல் தொடர் என்றாலே விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்தவகையில் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களிடையே கூட தீவிரமாக ஆக்ரோஷம் காணப்படும். இது பல நேரங்களில் களத்தில் ஒரு பெரிய மோதலாகவும் வெடிக்க கூடும். அந்தவகையில் இதுவரை ஐபிஎல் களத்தில் இந்திய வீரர்கள் இடையே நடந்த மோதல்கள் என்ன? என்ன?

ஹர்பஜன்-ஶ்ரீசாந்த்:

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் ஹர்பஜன்

மற்றும் ஶ்ரீசாந்த் இடையே போட்டி முடிந்தபின் இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. எனினும் இந்த விஷயத்திற்கு பிறகு ஹர்பஜன் சிங் மற்றும் ஶ்ரீசாந்த் இணைந்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினர்.

அஸ்வின்-கோலி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் பெங்களூருவிற்கு எதிரான லீக் போட்டியில் சற்று பொறுமையை இழந்தார். அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. அந்த சமயத்தில் அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டார். எனினும் அவரால் அடிக்க முடியவில்லை. அப்போது பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி அதைப் பார்த்து நகைத்தார். இதற்கு அஸ்வின் கோபத்தில் தனது கை கவசத்தை தூக்கி ஏறிந்தார்.

ராயுடு-ஹர்பஜன்:

ஐபிஎல் தொடரில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் களத்தில் மோதிகொண்டனர் அது ஹர்பன்-ராயுடு தான். புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஃபில்டிங்கில் ராயுடு சரியாக செயல்படவில்லை என்று ஹர்பஜன் கோபம் கொண்டார். இதன்காரணமாக களத்தில் ஹர்பஜன் ராயுடுவை திட்ட ஆரம்பித்தார். இது அவர்கள் இருவரின் நடுவே சலசலப்பை ஏற்படுத்தியது.

கோலி-கம்பீர்:

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத மோதல் என்றால் அது கம்பீர்-கோலி இடையேயான மோதல் தான். கொல்கத்தா-பெங்களூரு போட்டியின் போது கம்பீர் ஆட்டமிழந்தவுடன் கோலி அவரை கிண்டல் செய்தார். இதற்கு கம்பீரும் பதிலுக்கு கோலியுடன் மோதினார். இதனால் களத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. எனினும் ராஜாட் பாட்டியா இருவரையும் சற்று அமைதி படுத்தினார். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு கோலி கேப்டனாக இருந்த போது இந்திய அணியில் கம்பீர் இடம்பெற்றார்.

கோலி-சூர்யகுமார் யாதவ்:

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை-பெங்களூரு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவை விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்தார். அந்தப் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூர்யகுமார் இடம்பெறவில்லை. அந்தக் கோபத்திற்கும் கோலியின் ஸ்லெட்ஜிங்கிற்கும் சூர்யகுமார் தனது ஆட்டத்தின் மூலம் பதிலளித்தார். இது பார்ப்பதற்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.

மேலும் படிக்க: ‘நான் நடிகர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும்’- மனம்திறந்த வருண் சக்ரவர்த்தி