ஐபிஎல்: ஒரே போட்டியில் 2 மெய்டன் வீசி அசத்திய ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிராஜ்!

Update: 2020-10-22 03:21 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முகமது சிராஜின் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு மெய்டன் ஓவர்களை வீசி சிராஜ் சாதனைப் படைத்தார். இந்நிலையில் யார் இந்த சிராஜ்? அவர் கடந்த வந்த பாதை என்ன?

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சிராஜ். இவரது தந்தை முகமது கவுஸ் ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணிப் புரிந்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக சிராஜ் எந்தவித அகாடமிக்கும் பயிற்சிக்கு செல்லவில்லை. எனினும் அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தால் தீவிரமாக டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்தார். டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்க அவர் பள்ளி வகுப்புகளை புறக்கணித்தார்.

இவருடைய தந்தையின் கடின உழைப்பை பார்த்த சிராஜ் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய வீரராக வந்து தனது குடும்பத்தின் வறுமையை போக்க நினைத்தார். இதன்விளைவாக அவருக்கு 2015ஆம் ஆண்டு ஹைதராபாத் ரஞ்சி அணியில் இடம் கிடைத்தது. அந்தத் தொடரில் 41 விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு இவரை 2.6 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கடந்த ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 30 வருடமாக ஆட்டோ ஓட்டுநராக உழைத்து வரும் தனது தந்தையை ஒரு சொந்த வீட்டில் அமர வைக்க வேண்டும் என்பதே சிராஜின் எண்ணமாக உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தவிர இந்திய டி20 அணியிலும் முகமது சிராஜ் இடம்பிடித்து இருந்தார். இவர் 2017ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக களமிறங்கி அசத்தினார். ஐபிஎல் தொடர் உள்ளூர் வீரர்களை கண்டறிய ஒரு துருப்புச் சீட்டாக உள்ளது என்பது சிராஜ் போன்ற வீரர்களின் எழுச்சி மூலம் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘படிக்கல் டூ நடராஜன்’- குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதித்த உள்ளூர் வீரரகள்