ஐபிஎல் சம்பளத்தில் ‘நூறு கோடி’யை தொட்ட மூன்று வீரர்கள் யார் தெரியுமா?

Update: 2020-10-05 03:15 GMT

ஐபிஎல் போட்டிகள் இம்முறை யுஏஇயில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. எப்போதுமே ஐபிஎல் தொடர் என்றால் அதிக பொழுதுபோக்கு மற்றும் அதிக பணப்புழக்கம் என்பது வழக்கம். அந்தவகையில் தற்போது மூன்று வீரர்கள் தங்கள் ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளனர். அது என்ன?

இதுவரை 12 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் வீரர்கள் நல்ல லாபத்தை இட்டியுள்ளனர். ஐபிஎல் தொடர் மூலம் மூன்று வீரர்கள் 100 கோடிகளுக்கும் மேலாக சம்பளம் பெற்று புதிய ‘சதம் கிளப்’ தொட்டுள்ளனர். இந்தச் சம்பளம் விவரம் தொடர்பாக ‘இன்சைட் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிக சம்பளம் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதல் முன்று இடத்தில் இந்திய வீரர்கள் தான் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் தற்போதைய கேப்டனும் ஆர்.சி.பி அணியின் கேப்டனுமான விராட் கோலி உள்ளார். இவர் இதுவரை ஐபிஎல் தொடர் மூலம் 126. 2 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய சம்பளம் 17 கோடி ரூபாய். 2008 ஆண்டு முதல் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். தற்போதைய ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெற்றுள்ள வீரர் விராட் கோலி தான்.

நிழற்படம்: ஐபிஎல்

இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா உள்ளார். ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடர் மூலம் 131.6 கோடியை வருமானமாக பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா 15 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

ஐபிஎல் சம்பள பட்டியலில் நூறு கோடிக்கு மேலாக பெற்று முதல் இடத்தை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பிடித்துள்ளார். இவர் இதுவரை ஐபிஎல் தொடர் மூலம் 137.8 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய சம்பளம் 15 கோடியாக உள்ளது. முதலாவது ஐபிஎல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் அதிக பணப்புழக்கம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இதன்மூலம் நூறு கோடிக்கும் மேலாக வீரர்கள் வருமானம் ஈட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் படிக்க: ‘கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டும் பிறந்தவன் இவன்’- படிக்கலின் தாய்