தடைகளை வென்று சாதனைப் படைத்த சின்னப்பம்பட்டி 'யார்க்கர்' நாயகன் நடராஜனின் இன்ஸ்பிரேஷனல் பயணம்!

Update: 2020-09-30 02:58 GMT

மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் பிறந்து கடின உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணி வரை சென்று சாதித்தவர் நடராஜன். இந்நிலையில் 20 வயது வரை கிரிக்கெட் விளையாடாத நடராஜன் எவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்? அதற்காக அவர் தாண்டி வந்த தடைகள் என்ன?

யார் இந்த நடராஜன்? இவ்வளவு நாள் எங்கிருந்தார்? சற்று பின்னோக்கி பயணித்தால் இவர் கடந்து வந்த மிகக் கடினமான பாதை தெரியும். சேலத்தில் உள்ள சிறய கிராமமான சின்னப்பயல் பட்டியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இவர். மேலும் இவருக்கு கீழ் நான்கு சகோதர சகோதரிகள் உள்ளனர். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட நடராஜன் வறுமை சூழலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி படிப்படியாக முன்னேறினார். அவருக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தார் அவரது நண்பர் ஜெயப்பிரகாஷ். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போதும் தனது ஜெர்சியில் அவர் இனிசியல்கள் பதித்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தமிழக கிரிக்கெட் வீரர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. குறிப்பாக ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் 6 யார்க்கர்கள் வீசி பிரமிப்பூட்டினார். அதன் பிறகு நடந்த 2017 ஐபிஎல் ஆக்ஷ்னில் 3 கோடி கொடுத்து இவரை ஏலத்தில் எடுத்தது. அத்தொடரில் சிறப்பாக விளையாடா விட்டாலும் தனக்கு கிடைத்த வருமானத்தின் மூலமாக பல நற்காரியங்கள் செய்தார். ஆடம்பர செலவுகள் செய்யாமல் தனது குடும்பத்திற்கான தேவைகளை முதலில் பூர்த்தி செய்தார். தன் உடன் பிறந்தவர்களின் கல்வி செலவினை கவனித்து கொள்கிறார். அதோடு நில்லாமல் தனது கிராமத்தில் தன்னை போல் உள்ள பல திறமையான வீரர்கள் முறையான பயிற்சி மேற்கொள்ள கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கினார். இதன்மூலம் பயனடைந்த பல வீரர்களில் முக்கியமான ஒருவர் கடந்த ஆண்டு டிஎன்பிஎலை கலக்கிய பெரியசாமி. கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய இவர் தற்போது துபாயில் கேகேஆர் அணியுடன் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். இது நடராஜனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தற்போது இவருடைய அகாடெமியில் கிட்டத்தட்ட 60 வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதற்காக பல தமிழக வீரர்கள் உதவி செய்து வருகின்றார்கள்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு நடராஜன் ஒரு நெட் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். எனினும் ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு தேர்வாகி இருந்த தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் அடைந்ததால் அவருக்கு பதில் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார்.

மேலும் ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பு நவதீப் சாய்னிக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் ஒருநாள் தொடருக்கான் அணியிலும் நடராஜன் கூடுதலாக சேர்க்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய நடராஜன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அசத்தியுள்ளார். இதேபோல் இந்திய அணியின் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக நடராஜன் மாறுவார் என்று பலர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அறிமுக டி20 போட்டியில் அசத்திய ‘சின்னப்பம்பட்டி சிங்கம் நடராஜன்’- ட்விட்டரில் பாராட்டிய ரசிகர்கள்