இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கீப்பிங் 'தோனி'யாக உருவாகிறாரா தானியா பாட்டியா?

Update: 2020-02-22 01:20 GMT

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தான் தானியா பாட்டியா. இவர் நேற்றைய போட்டியில் 2 கேட்ச்கள் பிடித்து, 2 ஸ்டெம்பிங்கும் செய்தார். இவர் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டேவின் பந்துவீச்சின் போது சதர்லாந்தை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தது அனைவரையும் கவரந்தது. ஏன் போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டூம் தானியாவை வெகுவாக பாராட்டினார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் தானியாவை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் தோனியுடன் ஒப்பிட்டனர். அவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தோனி என்று குறிப்பிட்டு வருகின்றனார். எனினும் வெறும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தானியாவை அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கிட்ட தட்ட சேர்த்து 600 இன்னிங்ஸிற்கு மேல் கீப்பிங் செய்துள்ள தோனியுடன் இவ்வளவு குறுகியா காலத்தில் ஒப்பிடுவது சரியாக இருக்காது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தானியா பாட்டியா கீப்பராக விளையாடி வருகிறார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 46 டி20 போட்டிகளில் விளையாடி 19 கேட்ச் மற்றும் 42 ஸ்டெம்பிங் செய்துள்ளார். மகளிர் டி20 வரலாற்றில் அதிக ஸ்டெம்பிங் செய்துள்ள வீராங்கனைகள் வரிசையில் தானியா பாட்டியா மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆகவே மகளிர் கிரிக்கெட்டில் ஒரு தரமான கீப்பராக வளர்ந்துள்ளார் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

 

ஆயினும் இவருடைய பேட்டிங் செயல்பாடே அணிக்கு மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இவரின் டி20 போட்டிகளின் பேட்டிங் சராசரி வெறும் 8.69 தான். அத்துடன் கடைசியாக விளையாடியுள்ள 5 இன்னிங்ஸில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 8 ரன்கள் ஆகும். இவருடைய பேட்டிங் திறமையை வலுப்படுத்தினால் இவர் அணிக்கு ஒரு நல்ல பக்க பலமாக விளங்கலாம். அத்துடன் இந்திய ஆடவர் அணியின் விக்கெட் கீப்பர் தோனி கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்க கூடியவர். எனவே தான் அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்.

ஆகவே தற்போதைய நிலையில் தானியா பாட்டியா ஒரு விக்கெட் கீப்பிங் தோனியாக இந்திய மகளிர் அணியில் உருவாகி வருகிறார் எனக் கூறினால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே அணிக்கு முக்கியமான வீரராக உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கை செய்வது போல் அவரது பேட்டிங் திறமையிலிருந்து சிலவற்றை தானியா பாட்டியா செய்தால் அப்போது அவர் இந்திய மகளிர் அணியிம் முழு தோனியாக மாறிவிடுவார்.