மீண்டும் வைரலான ஜெமிமா ரோட்ரிக்ஸின் நடனம் - வீடியோ 

Update: 2020-03-01 07:15 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்திய அணி குரூப் போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வி அடையாமல் அனைத்திலும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் மகளிர் அணி வீராங்கனைகள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர்.

இந்திய மகளிர் அணியில் எப்போதும் அதிகமாக நடனம் ஆடுபவர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பெண் பாதுகாவலருடன் நடனமாடியது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடனம் வீடியோ ஒன்றை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவர் சக வீராங்கனை ஹர்லீன் தியோலுடன் உள்ளார். இவர்களுடன் இளம் ஆஸ்திரேலிய சிறுமிகளும் உள்ளனர். அந்த சிறுமிகளுக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் நடனம் கற்றுக்கொடுக்கிறார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐசிசி, “ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீண்டும் நடனம் ஆடுகிறார். இந்த முறை அவருடைய நடனத்தை சில சிறுமிகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவில், சமீபத்தில் வெளியான கார்த்திக் ஆரியனின் ‘ஹான் மயின் கலாட்’ பாலிவுட் பாடலுக்கு எப்படி நடனம் ஆட வேண்டும் என்று ஜெமிமா ரோட்ரிக்ஸ் கற்றுகொடுக்கிறார். ஜெமிமா கற்றுக் கொடுத்த நடனத்தை சிறுமிகள் சிறப்பாக ஆடும் வகையில் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பலரும் கண்டு ரசித்து வருகின்றனர். அத்துடன் தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் வரும் 5ஆம் தேதி விளையாடுகிறது. இந்திய அணியுடன் மோதவுள்ள அணி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.