‘சாதிக்க உயரம் தடையில்லை என்று நிரூபித்த பூனம் யாதவ்’- நெகிழ வைத்த ஹாங்காங் வழக்கறிஞரின்  ட்விட்டர் பதிவு

Update: 2020-02-25 15:10 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் தான். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதேபோல நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் பூனம் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலிய போட்டிக்கு பிறகு தனது ஆட்டம் குறித்து பதிவிட்டிருந்தார். இதனை நேற்று ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பதில் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய குழந்தையிடம் பூனம் யாதவ் குறித்து சொல்ல போகிறேன். என்னுடைய மகனுக்குப் பந்துவீசுவது மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் உயரம் குறைவாக இருப்பதால் எப்படி பந்துவீசுவது என நினைத்து வருந்துகிறான்.

பந்துவீச உயரம் தடையில்லை என்பதை பூனம் யாதவ் நிரூபித்துள்ளார். எனவே அவருடைய கதையை எனது மகனுக்கு நான் நிச்சயம் கூறுவேன். அது அவனுக்கு நல்ல ஊக்கத்தை தரும்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பூனம் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் பதிவு இட்டுள்ளார். அதில், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இரு கைகள் ஸ்மையிலியை பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முடிவில் பூனம் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளர் இயன் பிஷப்பை சந்தித்தார். அப்போது இருவருன் புகைப்படம் ட்விட்டரில் பதிவிடப்பட்டது. இதற்கு வர்ணனையாளர் ஆலன் வில்கின்ஸ், பூனம் யாதவ் இன்று சந்தித்த மிகப் பெரிய சவால் இயன் பிஷப்புடன் நின்றது தான் எனக் கூறினார். இதற்கு இயன் பிஷப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பூனம் யாதவ் தான் எனக்கு மிகவும் பிடித்த சுழற்பந்து வீச்சாளர்” எனப் பதிவிட்டிருந்தார்.