“கேல் ரத்னா விருது கிடைத்தவுடன் கண்ணீர் விட்டு அழுதேன்”- ஹாக்கியின் முடிசூடா ராணி
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெரும் முதல் ஹாக்கி வீராங்கனை இவர் தான். இந்நிலையில் தனக்கு கேல் ரத்னா விருது கிடைத்து தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ராணி பேசியுள்ளார்.
அதில், “மகளிர் ஹாக்கி வீராங்கனையான எனக்கு கேல் ரத்னா விருது கிடைப்பது கடினம் எனக் கருதினேன். எனவே இந்த விருதிற்கான அறிவிப்பு வந்தவுடன் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அது எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமான தருணமாக இருந்தது. முதலில் என்னுடைய பெற்றோருக்கு இந்த விருது செய்தியை பகிர்ந்தேன். என்னுடைய தந்தை மிகவும் ஆனந்தப் பட்டார். அவரும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இந்த விருது என்னுடைய அர்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு கிடைத்த ஒன்றாக நான் கருதுகிறேன். எனினும் என்னுடைய ஒரே குறிக்கோள் இந்திய மகளிர் அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்று தருவதேயாகும். இதற்காக நாங்கள் ஒரு அணியாக தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளோம். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இதை நாங்கள் சாதித்து காட்டுவோம்.
இந்த கேல் ரத்னா விருது ஒலிம்பிக் போட்டிகளுக்காக உழைக்க நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும் தற்போது மகளிர் ஹாக்கி வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது சர்வதேச போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட தூண்டுகோளாக அமையும் .
கொரோனா பாதிப்பால் எங்களுடைய பயிற்சி சற்று தடைபட்டு இருந்தது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளோம். மீண்டும் கடினமாக உழைத்து நல்ல ஃபார்மிற்கு வருவோம். இந்த இக்கட்டான சூழலில் இந்திய விளையாட்டு ஆணையம் எங்களுக்கு பக்க பலமாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில், ஷாபாத் என்று ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராணி ராம்பால். தன்னுடைய 15 வயதில் 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொடரில் 7 கோல்களை அடித்து சிறந்த இளம் வீராங்கனைப் பட்டத்தை வென்றார். அப்போது முதல் இந்திய மகளீர் ஹாக்கி அணியில் ராணி ராம்பால் தவிர்க்க முடியாத ஒரு வீராங்கனையான வலம் வருகிறார்.
🎖 @imranirampal is only the third and first female hockey player to receive India's highest sporting honour, #KhelRatnaAward. pic.twitter.com/ByCUpqmwDi
— The Bridge (@TheBridge_IN) August 22, 2020
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற ராணி ராம்பால் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் 36 ஆண்டுகள் கழித்து இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றது. அதேபோல 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் அணி தகுதிப் பெற ராணி ராம்பால் அடித்த கோல் உதவியாக அமைந்தது. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முடிசூடா ராணியாக வலம் வரும் ராணி ராம்பாலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை ரசிர்கள் வரவேற்று வருகின்றனர்.
மேலும் படிக்க: “என்னுடைய வெற்றிக்கு என் அம்மா…”- இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் பெண்