வெளிநாட்டு கால்பந்து கிளப்பிற்கு விளையாடும் முதல் இந்திய வீராங்கனை - பாலா தேவி

Update: 2020-01-30 06:19 GMT

இந்திய கால்பந்து வீராங்கனையான பாலா தேவி கங்கோம், ஸ்காட்லாந்து நாட்டின் ரேஞ்சர்ஸ்

எஃப்.சி அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், வெளிநாட்டு கால்பந்து

கிளப்பிற்காக விளையாடப்போகும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும்

சொந்தக்காரர் ஆகிறார் பாலா தேவி.

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி வரும் பாலா தேவி, இந்திய அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனை. அதுமட்டுமின்றி, நட்சத்திர கால்பந்து வீராங்கனையான இவர், இந்திய மகளிர் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையாகவும் உள்ளார்.

பாலா தேவியை தேர்வு செய்ததை உறுதிப்படுத்தியுள்ள ரேஞ்சர்ஸ் எஃப்.சி அணி, தனது

டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. “வெளிநாட்டு கிளப்பிற்காக

விளையாடப்போகும் முதல் இந்திய வீராங்கனை மட்டுமல்ல, முதல் சர்வதேச ஆசிய கால்பந்து

வீராங்கனையும் கூட. அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளது.

இது குறித்து பேசிய அவர், “ரேஞ்சர்ஸ் எஃப்.சி அணியுடன் ஐந்து நாள் பயிற்சியில்

ஈடுபட்டிருந்தேன். அந்த பயிற்சி நேரம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது.” என

தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கால்பந்து கிளப்பிற்கு பாலா தேவி தேர்வாகியுள்ளது குறித்து பேசியுள்ள இந்திய மகளிர் அணி பயிற்சியாளர் மேமோல் ராக்கி, “பாலா தேவிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர் சிறப்பாக விளையாடுவர் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அவர் ரேஞ்சர்ஸ் எஃப்.சி அணிக்கு விளையாடுவது, ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். அங்கு விளையாடுவதினால் கிடைக்கும் பயிற்சியும், அனுபவமும் இந்திய அணிக்காக விளையாடும்போது உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பாலா தேவி, சிறு வயது முதலே காலபந்து

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மணிப்பூர் மாநில அணிக்காக பங்கேற்று விளையாட அவர்,

குறுகிய காலத்திலேயே இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்தார்.

2014-ம் ஆண்டு இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அந்த ஆண்டுக்கான ‘கால்பந்து

வீராங்கனை’ விருதை பெற்றார். 2016 தெற்காசிய விளையாட்டில் ஐந்து போட்டிகளில் பங்கேற்று

3 கோல்கள் அடித்தவர். குறிப்பாக, 2016 எஸ்.ஏ.எஃப்.எஃப் மகளிர் சாம்பியன்ஷிப்பில் கேப்டனாக

இந்திய அணியை வழிநடத்திச் சென்று கோப்பையையும் கைப்பற்றினார்.