ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி விலகல்

Update: 2020-02-08 03:11 GMT

ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் குழுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் பலம் வாய்ந்த அணி தேர்வு செய்யப்பட்டது. மகளிர் பிரிவில் அனுபவ வீராங்கனைகள் சாய்னா மற்றும் பி.வி.சிந்து விலகியதால் ஒரு அனுபவமிக்க இளம் அணி தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மகளிர் அணி ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இருப்பதால் பிலிபைன்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து இந்திய மகளிர் அணி விலகுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஆசிய பேட்மிண்டன் சங்கத்திடம் எடுக்கப்பட்ட உரிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். அதன்பின்னர் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தினோம். இதில் ஆடவர் அணி தொடரில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்தது. எனினும் மகளிர் அணி வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்க தயக்கம் காட்டினர். எனவே இந்திய மகளிர் அணி இந்தத் தொடரில் பங்கேற்காது என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இத் தொடரில் பங்கேற்கும் ஆடவர் அணி வரும் 9ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற சாய் பிரணீத், கிடாம்பி ஶ்ரீகாந்த்,ஹெச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல இரட்டையர் பிரிவிற்கு சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி- சிராக் செட்டி இணையும், துரூவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் இணையும் இடம்பெற்றுள்ளனர். இந்திய ஆடவர் அணி 2016ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.