புரோ லீக்: இரண்டாவது போட்டியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி போராடி தோல்வி

Update: 2020-02-09 13:16 GMT

ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடியது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்தது. முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத் பதில் கோல் அடித்தார். இதன்மூலம் 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

பின்னர் இரண்டாவது கால்பகுதியில் இரு அணிகளும் முதல் மூன்று நிமிடங்களுக்குள் கோல் அடித்து 2-2 என்று சமநிலையில் இருந்தனர். ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் மற்றொரு கோலை அடித்து 3-2 என முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் நடப்புப் புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

எனினும் இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 5ஆவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புரோ லீக் தொடரில் இந்திய அணி அடுத்து வரும் 21மற்றும் 22 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளும் ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தோல்வியிலிருந்து இந்திய அணி பாடங்களைக் கற்றுக் கொண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.