டேபிள் டென்னிஸில் அசுரவேகத்தில் வளரும் தமிழன் சத்தியன் மற்றொரு புதிய அத்தியாயம் !

Update: 2020-02-09 07:22 GMT

இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் பிரிவில் மிகவும் முக்கியமான இரண்டு வீரர்கள் சரத் கமல் மற்றும் சத்தியன். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் சரத் கமல் மிகுந்த அனுபவம் உடையவர். சத்தியன் தற்போது வளர்ந்து வரும் ஒரு திறமையான வீரர்.

திறமை நிறைந்த நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்தியனுக்கு ஜப்பான் லீக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சத்தியனை ஒகயாமா ரிவேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்காக சத்தியன் ஜப்பான் லீக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

ஜப்பான் லீக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் சத்தியன் என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் பெருமையான விஷ்யமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து சத்தியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,"ஜப்பான் லீக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க போகும் முதல் இந்திய வீரர் நான் தான் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். ஒகயாமா ரிவேட்ஸ் அணி என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறது. நான் ஜப்பான் லீக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 2020-21 சீசனில் விளையாட உள்ளேன்.

https://twitter.com/sathiyantt/status/1226091363860566017?s=20

மேலும் இதற்காக நான் அங்கு சென்று பயிற்சி எடுக்கவும் உள்ளேன். இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர்களுடன் விளையாட நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் "எனப் பதிவிட்டுள்ளார்.

27வயதாகும் சத்தியன் சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 25ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் முதல்நிலை டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் தான். இவர் ஏற்கெனவே கடந்த மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற கிளப் போட்டியில் ஜெர்மனியின் ஒரு கிளபிற்காக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார்.

அத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டு டி.ஓ.ஐ.எஸ்.ஏ(TOISA)வின் சிறந்த டேபிள் டென்னிஸ் வீரர் 2018(நடுவர்கள் தேர்வு) விருதை வென்றார். அத்துடன் அந்த ஆண்டு இவர் மத்திய அரசிடமிருந்து அர்ஜூனா விருதையும் பெற்றார்.

சென்னையில் பிறந்த சத்தியன் 2011ஆம் ஆண்டு ஜூனியர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். அதன்பின்னர் சிறப்பாக விளையாடி வந்த சத்தியன் 2016ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் வேகமாக வளர்ந்த இந்த தமிழன் தற்போது இந்தியாவின் நம்பர் டேபிள் டென்னிஸ் வீரர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.