ஜனவரி ரவுண்ட் அப்: சானியா கம்பேக் முதல் ராணி ராம்பால் விருது வரை முக்கிய தருணங்கள்

Update: 2020-01-31 02:48 GMT

இந்தாண்டின் முதல் மாதத்தின் கடைசி நாள் இன்று நாம் இருக்கிறோம். 2020ஆம் ஆண்டு விளையாட்டு உலகில் மிகவும் முக்கியமான ஆண்டு. ஏனென்றால் இந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த ஆண்டை பல விளையாட்டு வீரர்கள் தங்களது கனவு நிறைவேறும் ஆண்டாக கருதி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் மாதம் இந்திய விளையாட்டிற்கு ஒரு சிறப்பான தொடக்கமாகவே மாறியுள்ளது. இந்த மாதத்தில் நடந்த சில முக்கிய தருணங்களை நாம் தற்போது சிறிய ரீவைண்ட் செய்யலாம்.

சானியா மிர்சா கம்பேக்:

இரண்டரை ஆண்டுகால இடைவேளைக்குப் பிறகு இந்த மாதம் சானியா மிர்சா மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் களமிறங்கினார். தனது முதல் தொடரான ஹோபார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளீர் இரட்டையர் பிரிவில் நாடியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். எனினும் அவருக்கு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. இதற்கு காரணம் அவருடைய காயம் தான்.

மல்யுத்ததில் பதக்க வேட்டை:

இந்த ஆண்டின் முதல் தொடரான ரோம் ரேங்கிங் சீரிஸ் தொடரில் இந்திய மல்யுத்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7 பதக்கங்களை வென்றனர். பஜ்ரங் புனியா,வினேஷ் போகட், ரவிக்குமார் தாஹியா, குருபிரீத் ஆகியோர் தங்கப்பதக்கங்கம் வென்றனர். சுனில், சாஜன் மற்றும் அன்ஷூ மாலிக் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் தங்களது எடைப்பிரிவில் சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தினர்.

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் தகுதி:

அறுவை சிகிச்சை பிறகு இந்த மாதம் முதல் முறையாக களமிறங்கிய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று அசத்தினார். இவர் 2018ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதற்கு பிறகு காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்தார். அதனால் 2019ஆம் ஆண்டு முழுவதும் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று ஒலிம்பிக் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளார்.

படகுப் போட்டியில் சாதித்த தமிழச்சி:

அமெரிக்காவின் மியாமியில் உலகக் கோப்பை படகுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் லேஸர் ரேடியல் பிரிவில் இந்தியாவின் சார்பில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன் பங்கேற்றார். அவர் தனது சிறப்பான மற்றும் நேர்த்தியான முறையால் பந்தய தூரத்தை மூன்றாவது வீராங்கனையாக கடந்து வெண்கல பதக்கம் வென்றார். அத்துடன் உலக கோப்பை படகுப்போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நேத்ரா படைத்துள்ளார்.

'வேர்ல்ட் கேம்ஸ் அத்லெட் ஆஃப் தி இயர்' மகுடம் வென்ற ராணி:

இந்திய மகளீர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் 'வேர்ல்ட் கேம்ஸ் அத்லட் ஆஃப் தி இயர் 2019' என்ற விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்படும் முதல் விளையாட்டு வீராங்கனை ராணி தான். ராண்யின் பெயரை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரைத்தது. இந்த விருதிற்கு 25 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி மொத்தம் 1,99,477 வாக்குகள் பெற்று ராணி ராம்பால் விருதை தன்வசமாக்கியுள்ளார். இந்திய ஹாக்கியில் முடிசூடா ராணியாக வலம் வரும் ராணிக்கு சர்வதேச அளவில் ஒரு மகுடம் கிடைத்திருப்பது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.