ஏடிபி பெங்களூரூ சேலஞ்சர் 2020: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

Update: 2020-02-13 15:35 GMT

ஏடிபி சேலஞ்ர் போட்டிகளில், ஏசியாவிலேயே அதிக பரிசுத்தொகை வழங்கும் போட்டியான ஏடிபி சேலஞ்ர் பெங்களூரு 2020, கேஎஸ்எல்டிஏ டென்னிஸ் மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று ஒற்றையர் பிரிவில் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டங்களில் 6 இந்திய வீரர்கள் பங்கேற்றதால் ரசிகர்களிடைய பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் ஆட்டங்களில் இளம் வீரர்களான சித்தார்த் ராவத் மற்றும் நிக்கி பூனாச்சா ஆகியோர் தரவரிசையில் தங்களை விட அதிக இடத்தில் உள்ள ஜீலியன் ஒக்லெப்போ மற்றும் யுய்ச்சீ சுகிடா ஆகியோரை எதிர்த்து விளையாடி தோல்வி அடைந்தார்கள். அடுத்து விளையாடிய அனுபவமிக்க வீரர்களான ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனியும் பெரிதாக சோபிக்காமல் முறையே இல்யா இவாஷ்கா மற்றும் தாமஸ் ஃபேபியானோவிடம் தோல்வி அடைந்தனர்.

ரசிகர்களின் ஏமாற்றம் அதோடு முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கபட்ட பிரஜ்னேஷ் குணேஸ்வரன் மற்றும் சுமித் நகாலும் தரவரிசையில் தங்களை விட குறைந்த இடத்தில் இருக்கும் வீரர்களிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். இத்துடன் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.